பாலியல் குற்றம் புரிந்த 23 பள்ளி ஆசிரியர்கள்...டிஸ்மிஸ்: சான்றிதழையும் ரத்து செய்கிறது தமிழக அரசு

சென்னை:பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 23 பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். அவர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, ஈரோடு, ஓசூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில், பள்ளி மாணவியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பூதாகரமாகின. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், 238 பள்ளி மாணவியர் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவற்றில், 26 சம்பவங்கள், பள்ளிகளுக்கு வெளியில் நடந்தவை என கண்டறியப்பட்டுள்ளன.
விசாரணை
பள்ளிகளில் நடந்த சம்பவங்களில், ஏற்கனவே 11 ஆசிரியர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். விசாரணை முடிந்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களில், நான்கு பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்.
மேலும், 46 பேர் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்து வந்தது. இதில், திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி, திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஒருவர் என, ஏழு பேர் மீதான பாலியல் குற்றம் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது.
தற்போது, மேலும் 15 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு உள்ளது.
உத்தரவு
இதையடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 பேரையும் பணியிலிருந்து நீக்கவும், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்யும்படியும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, இத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி மாணவியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை எண், 121ல் தெளிவாக கூறப்பட்டுள்ளன.
அதன்படியே தற்போது பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்கள், கட்டாய பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்; அவர்களின் கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், அரசு பணியாளர் நடத்தை விதிப்படியான தண்டனைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கான நீதிமன்ற தண்டனையும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெற்றோர் கூறியதாவது:தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற எண்ணம் சமீப காலமாக மாறி வருகிறது. காரணம், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஆசிரியர்களே பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதால், பெரும்பாலான குழந்தைகள் வெளியில் சொல்ல தயங்குகின்றனர். அதையும் மீறி, அவர்கள் புகார் அளித்து, அதன் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை பாராட்ட வேண்டும். இந்த நடவடிக்கையால், குற்றமிழைத்த ஆசிரியர்களின் பணப்பலன்கள் ரத்தாக வாய்ப்புள்ளது. அதனால், குடும்பத்தில் செல்வாக்கை இழப்பர். அத்துடன், சமூகத்திலும் ஆசிரியர் என்ற மரியாதையை இழந்து விடுவர். அதிகாரத்தில் உள்ள சிலருடன் தொடர்பில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஆசிரியர்கள், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனர். அதனால், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவையும் மறுபரிசீலனை செய்து, மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவியருக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து, பள்ளிகளில் உள்ள 'மாணவர் மனசு' பெட்டியில் எழுத்துப்பூர்வமான புகாராக அளிக்கலாம். மேலும், '14417' என்ற பள்ளிக்கல்வி துறையின் தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.குழந்தைகள் பாதுகாப்புக்கான '1098' மற்றும் மகளிர் பாதுகாப்புக்கான '181' என்ற தொலைபேசி எண்ணிலும், போலீசின் அவசர உதவி எண்ணான 100லும் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.








மேலும்
-
காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்
-
ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி
-
இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்
-
அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்: பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுப்பு
-
இந்தியா வருகின்றனர் அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி