வேங்கை வயல் விவகாரம்; குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

14


புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில், 2022 டிசம்பரில் ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ், வெள்ளனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.



மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணனை நியமித்து உத்தரவிட்டது. விசாரணை முடிந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, 32, சுதர்சன், 20 மற்றும் முத்துகிருஷ்ணன், 22, ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஊராட்சி தலைவரின் கணவரை பழி தீர்க்கும் நோக்கத்துடன் இவர்கள் மூவரும், மனிதக்கழிவை குடிநீர் தொட்டியில் கலந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து மூவரும் தலைமறைவாகி விட்டனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களே குற்றத்தை செய்திருப்பது உறுதியான நிலையில், வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் தலைமறைவாக இருந்த முரளிராஜா, சுதர்சன், மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் இன்று வழக்கறிஞர்களுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதிகளின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.

Advertisement