சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுக்கு பின் சடையனேரிக்கு வந்தது அரசு பஸ்

முதுகுளத்துார்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டதால் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சடையனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய வேலைக்கு செல்லும் கிராம மக்கள் முதுகுளத்துார், சிக்கல் செல்கின்றனர். இதனால் தினந்தோறும் கூடுதல் செலவு செய்யும் அவல நிலை உள்ளது. 2 கி.மீ., நடந்து சடையனேரி விலக்கு ரோட்டில் காத்திருந்து பஸ்சில் செல்கின்றனர்.இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் முறையாக சடையனேரி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் முதுகுளத்துாரில் இருந்து சடையனரி, சவேரியார்பட்டினம் வழியாக கடலாடி செல்கிறது. கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சின் போக்குவரத்து பணியாளர்கள், டிரைவர், கண்டக்டருக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். கிராமத்திற்கு பஸ் வருவதற்கு உதவியாக இருந்த தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement