இயக்குனர் ஷங்கர் மீதான வழக்கு; சொத்து முடக்கத்துக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

சென்னை: இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான 11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

நடிகர் ரஜினிகாந்த்- ஐஸ்வர்யாராய் நடித்த 'எந்திரன்' திரைப் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த பட கதை காப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பான வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான 11.10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

சொத்து முடக்கத்தை எதிர்த்து ஷங்கர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை இன்று (மார்ச் 11) நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், 'தனி நபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கக்கூடாது' என தெரிவித்தனர்.

பின்னர், சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது குறித்து அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement