ஆடு வேட்டையாடிய சிறுத்தை; பிடிபட்ட சிறிது நேரத்தில் பலி

தொண்டாமுத்தூர்; கோவையில், ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துறையினரிடம் பிடிபட்டது. ஆனால், சில மணி நேரங்களில் உயிரிழந்தது.

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கெம்பனூர் மற்றும் ஓணாப்பாளையம் பகுதிகளில், உள்ள தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ஆடுகளை, அதிகாலை நேரங்களில், அந்த சிறுத்தை கடித்துக் கொன்று வேட்டையாடி வந்தது.

இதுவரை, 8க்கும் மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிக்க, கெம்பனூர், ஓணாப்பாளையம் பகுதிகளில், 8 கேமராக்கள் பொருத்தி, இரு கூண்டுகள் வைக்கப்பட்டன.

கூண்டுகளில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம், நள்ளிரவு 12:30 மணிக்கு, பூச்சியூர், பூபதி ராஜா நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில், சிறுத்தை புகுந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, சிறுத்தையை கண்காணித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் வெளியே வந்த சிறுத்தையை, வலை வீசி பிடித்து, மயக்க ஊசி செலுத்தினர். பத்திரமாக கூண்டில் அடைத்து, மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை முகாமிற்கு கொண்டு சென்றனர். அப்போது, சிறுத்தைக்கு உடல்நலக்குறைவு இருப்பது தெரியவந்தது. வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி சிறுத்தை நேற்று பகல் உயிரிழந்தது.


மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், சிறுத்தையின் உடலில், சில இடங்களில் காயங்கள் இருந்தன. அதோடு, வலது காலில், எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. மற்ற விலங்குகளிடமிருந்து தோல் நோய் பரவியிருந்தது. வாய் பகுதியிலும் காயங்கள் இருந்தன. நாங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உயிரிழந்தது வருத்தத்தை தருகிறது, என்றார்.

உதார் விட்ட 'குடிமகன்கள்' காயம்



கட்டடத்தின் உள்ளே சிறுத்தை பதுங்கியிருந்த தகவல் பரவியதும், வனத்துறையினர் அங்கு வந்து காத்திருந்தனர். சிறுத்தையை பிடிப்பதை காண, கட்டடத்தின் வெளியே பொதுமக்கள் குழுமினர். அப்போது சிறுத்தை வெளியே வந்தபோது, அங்கு வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி, மதுபோதையில் நின்று கொண்டிருந்த சிலர், சிறுத்தையை பிடிக்கப்போவதாக தடுமாறியபடி உதார் காட்டினர். இதில், இருவருக்கும், கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட வனத்துறையினர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

Advertisement