தேசிய ஆரோக்கிய பானமாக தேநீரை அறிவிக்க வேண்டும்: தேசிய தேயிலை மாநாட்டில் வலியுறுத்தல்

குன்னுார்; 'பல்வேறு குண நலன்கள் கொண்ட தேநீரை, தேசிய ஆரோக்கிய பானமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோவை வால்பாறை, கேரளா, கர்நாடக மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாளின் தரம் உயர்ந்து வரும் நிலையில், தேயிலை நுகர்வை அதிகரிக்க தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து, நீலகிரி மாவட்டம் குன்னுார் தேயிலை வாரிய துணை தலைவர் ராஜேஷ் சந்தர் கூறியதாவது:

தென் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாளின் தரம் உயர்ந்துள்ளதால், இதனை வாங்குபவர்கள் மற்றும் நுகர்வோரிடம், போதிய விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும் வகையில், கடந்த வாரம், கோவையில் தேசிய தேயிலை மாநாடு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள எஸ்டேட் உரிமையாளர்கள்; தேயிலை முன்னணி உற்பத்தியாளர்கள்; விற்பனையாளர்கள்; வாங்குபவர்கள், 380 பேர் பங்கேற்றனர்.

அதில், தேயிலை துாள் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் சிறப்புகள் அறிந்துகொண்டு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தேயிலை துறையில், செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில் நுட்பங்களை ஒருங்கிணைக்கும் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு குண நலன்கள் கொண்ட, தென்மாநிலங்களின் உற்பத்தி செய்யப்படும் தேநீரை தேசிய ஆரோக்கிய பானமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீலகிரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, பசுந்தேயிலை கிலோவுக்கு, 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

வெளிமார்க்கெட்டில் தேயிலை துாள் கிலோ குறைந்தபட்சம், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தென் மாநில தேயிலைக்கு, 180 ரூபாய் விலை கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement