யு.ஜி.சி., பிரதிநிதியை தவிர்த்தது விதிமீறல்; கவர்னர் ரவி குற்றச்சாட்டு

சென்னை: யு.ஜி.சி., பிரதிநிதியை தவிர்த்துவிட்டு துணை வேந்தர் தேடுதல் குழு அரசாணையை வெளியிட்டது விதிமீறல் என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்க தமிழக அரசுக்கு கடந்தாண்டு அக்டோபர் 24ல் உத்தரவிடப்பட்டது. அதில், யு.ஜி.சி., சேர்மன் பிரதிநிதி உட்பட நான்கு பேர் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால், அவ்வாறு செய்யாமல், சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கு மாறாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. யு.ஜி.சி., ஒழுங்குமுறைகளுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கும் புறம்பான அந்த அரசாணை செல்லாது.
எனவே, அந்த அரசாணையை வாபஸ் பெற வேண்டும். யு.ஜி.சி., பிரதிநிதியை சேர்த்து துணை வேந்தர் தேடுதல் குழு அமைத்து உத்தரவு வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யு.ஜி.சி., சேர்மன் பிரதிநிதி, தமிழக அரசு பிரதிநிதி, வேந்தர் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி ஆகியோரை கொண்ட தேடுதல் கமிட்டியை கவர்னர் ஏற்படுத்தியுள்ளதாக, ராஜ்பவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

