150 வது ஆண்டு டெஸ்ட் * இங்கிலாந்து-ஆஸி., மோதல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 150வது ஆண்டு டெஸ்ட் மோதலை கொண்டாடும் வகையில், மெல்போர்னில் முதன் முறையாக பகலிரவு டெஸ்ட் நடக்க உள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் கடந்த 1877ல் முதன் முறையாக டெஸ்டில் மோதின. இப்போட்டி மெல்போர்னில் நடந்தது. அடுத்து இரு அணிகள் இடையிலான மோதலின் நுாற்றாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் 1977ல் மீண்டும் மெல்போர்னில் டெஸ்ட் நடந்தது. இந்த இரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது 150வது ஆண்டினை கொண்டாடும் வகையில், 2027, மார்ச் 11-15ல் இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதன் முறையாக மெல்போர்னில் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்க உள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி டாடு கிரீன்பெர்க் கூறுகையில்,'' கிரிக்கெட் அரங்கின் சிறந்த போட்டியாக 150வது கொண்டாட்ட டெஸ்ட் இருக்கப் போகிறது. கிரிக்கெட்டில் பாரம்பரிம், நவீனத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், இப்போட்டி மின்னொளியில் நடக்க உள்ளது'' என்றார்.

Advertisement