பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்

14

காரைக்குடி; காரைக்குடி அருகே பெற்றோரை இழந்து, வீட்டையும் இழந்து தவித்த குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்கள் வீடு கட்டிக் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


காரைக்குடி அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் உடல்நிலை சரியில்லாமல் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவரது மனைவியும் இவருக்கு முன்பு இறந்து விட்டார்.


இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். தாய் தந்தை உயிரிழந்த நிலையில், அத்தையின் அரவணைப்பில் குழந்தைகள் படித்து வந்தனர்.


இந் நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகள் கொட்டும் மழையில் தங்குவதற்கு கூட வீடின்றி தவித்து வந்தனர்.


இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனை அறிந்து காரைக்குடியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், நம்ம கோவிலூர் நண்பர்கள் சேர்ந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.


அதன்படி அவர்கள் தங்களின் நிதி பங்களிப்போடும், பிறரின் பங்களிப்போடும் தற்போது ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் குயில் கூடு என்று பெயரிட்டு ஒரு வீட்டை கட்டிக் கொடுத்துள்ளனர்.


தாய், தந்தையை இழந்து வீட்டையும் இழந்து தவித்த குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்தது ஊர் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement