உரிமைகளை பறிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

56

திருவள்ளூர்: 'தமிழகம் என்ன பிச்சைக்கார மாநிலமா? நாங்கள் உழைத்து வரியைச் செலுத்திய பணத்தில் இருந்து, நிதியை கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை' என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூரில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது: 3 ஆண்டுகளில் நமது மாநிலம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது. அதற்கு முன்பு எப்படி இருந்தது. முந்தைய ஆட்சியாளர்களால் நம் மாநிலத்தின் வளர்ச்சி வளைந்த முதுகோடு, தமிழகத்தின் உரிமைகளை டில்லியின் காலடியில் அடகு வைத்து ஊர்ந்த அவலம். இதை எல்லாம் பார்த்து பொறுக்காத தமிழ் இனம், தி.மு.க., ஆட்சியை அமைத்தால் தான் நாடும், நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்க முடியும் என்று தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி மத்திய அரசே சொல்லி இருக்கிறது. மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு, நாட்டுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
ஆனால், மத்திய பா.ஜ., அரசு, கொல்லை புறம் வழியாக, வலதுசாரி கொள்கையை செயல்படுத்த துணை நின்ற அ.தி.மு.க., ஆட்சி போயிடுச்சே என்ற கோபத்துடன், மறுபடியும் தமிழகம் தலைநிமிர்ந்து நடைபோடுகிறது என்ற பொறாமை உணர்வோடும், எப்படி எல்லாம் தடை கற்களை போட முடியுமோ, அதை எல்லாம் முன்வந்து செய்கிறார்கள்.


உரிமைகளை பறிப்பதையும், தமிழகத்தை கொச்சைப்படுத்துவதையும் பார்த்து கொண்டிருக்க முடியாது. ஆட்சி பொறுப்பில் இருப்பதற்காக, பதவி சுகத்திற்காக, மத்திய அரசிடம் பணிந்து போகிற, முதுகெலும்பு இல்லாத அடிமை கூட்டம் நாம் இல்லை. மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக தி.மு.க.,வின் போராட்டக்குணத்தை பார்க்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளார்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கான குரலாக ஒலிப்போம். வாதாடியும், போராடியும் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவோம்.


மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, 'டில்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதியில் இருப்பவர்களோடு திட்டமிடுவது தான் அணுகுமுறை' என்றார். கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் சொன்னபடி நடக்கவில்லையே. அதற்கு மாறாகத்தான் செயல்பாடுகள் இருக்கின்றன. மாநிலங்களை அழிப்பது, மாநில உரிமைகளை பறிப்பது என சர்வாதிகார எண்ணமாக இருக்கிறது. மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறினீர்கள்? கூட்டணி ஜனநாயகத்திற்கு நீங்கள் மதிப்பளித்து செயல்படுத்தியது என்ன? என்பது தான் என்னுடைய கேள்வி.


மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பழிவாங்கப்படாது என்று மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு சொன்னார். தற்போது, பழிவாங்கும் அரசியலை மட்டுமே நடத்தி கொண்டிருக்கிறீர்கள். ரூ.2,151 கோடி நிதியை கொடுக்காமல், பழிவாங்கும் அரசியலை தானே நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழகம் என்ன பிச்சைக்கார மாநிலமா? நாங்கள் உழைத்து வரியைச் செலுத்திய பணத்தில் இருந்து, நிதியை கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்பதால், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். மக்களுக்கான, மாணவர்களுக்கான திட்டமாக இருந்தால் நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். தேசிய கல்விக் கொள்கையில் கல்வியில் இருந்து மக்களை நீக்கம் செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் கொண்டதாக இருக்கிறது. அதனால், தான் எதிர்க்க வேண்டி இருக்கிறது.


தேசிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை. இந்தியாவை வளர்க்க உருவாக்கப்பட்டதல்ல. ஹிந்தியை வளர்க்கக் கொண்டுவரப்பட்டது. சமூக நீதி எனப்படும் இடஒதுக்கீட்டை தேசிய கல்விக் கொள்கை ஏற்கவில்லை. பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தரக்கூடிய உதவித்தொகை இந்த கல்விக் கொள்கை மறுக்கிறது. 3,5 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்து வடிகட்டப் பார்க்கிறார்கள். 9 முதல் 12ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப்போகிறார்கள். இதனால், தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய இனம், நம்முடைய தமிழினம். உலகத்துக்கே யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற பண்பாட்டை சொல்லிக் கொடுத்தது. அப்படிப்பட்ட தமிழ் இனத்திற்கு நாகரிகம் தெரியாதா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அறம் பேசும் தமிழர்களுக்கு வகுப்பெடுக்காதீங்க. விட மாட்டோம். தமிழகம் விடாமல் போராடுவதை நீங்கள் தாங்கிக்க முடியாமல், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான். எது நாகரிகம் என்று உங்களால் சொல்ல முடியுமா? தமிழுக்கு நிதி ஒதுக்காமல், சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்குவது தான் நாகரிகமா? குஜராத்தில் இயற்கை பேரிடர் வந்தால் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்குவதும், தமிழகத்தில் பேரிடர் நிகழ்ந்தால் நாங்க கேட்டதில் ஒரு விழுக்காடும் ஒதுக்காதது தான் நாகரிகமா?, எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisement