மனைவியை கொன்றதாக வழக்கு ரத்து கோரிய கணவர் மனு தள்ளுபடி

பெங்களூரு: தன் மனைவியை 16வது மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொன்றதாக பதிவான குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்ய கோரி, கணவர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தள்ளுபடி செய்தார்.
பெங்களூரு யஷ்வந்த்பூரை சேர்ந்தவர் தேவேந்திர பாடியா. 2018ல் இவரது மனைவி, இவர்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.
ஆனால், இவர்களின் மகனோ, தன் தந்தை தான், தாயை 16வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார் என்று புகார் அளித்தார். இதையடுத்து எம்.சி., யார்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
கீழமை நீதிமன்றத்தில் நடந்த வந்த இவ்வழக்கில், 'தேவேந்திர பாடியா மீது கொலை, குடும்ப தகராறு' என்று குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தேவேந்திர பாடியா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: என் மனுதாரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அவரின் மனைவி தவறி தான், மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இதை கொலை என்று நினைத்து கூட பார்க்க முடியாது.
மனுதாரருக்கும், அவரது மகனுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. எனவே தான் தன் தந்தை மீது புகார் அளித்துள்ளார். மேலும், விசாரணை அதிகாரியை, தன் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அனுப்பும் அதிகாரம், நகர போலீஸ் கமிஷனருக்கு இல்லை. இவற்றை கருத்தில் கொண்டு, என் மனுதாரர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறந்த பெண்ணின் மகன் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'வழக்கை தாமதப்படுத்தவே, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். தந்தைக்கு எதிராக அவரது மகன் மட்டுமல்ல, மகளும் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''மனுதாரர் கூறுவது மேலோட்டமாக உண்மையாக இருந்தாலும் கூட, அவரின் சொந்த பிள்ளைகளே, தந்தைக்கு எதிராக எதற்காக புகார் அளிக்க வேண்டும்? தவிர, அவருக்கு எதிராக எந்த வாரன்டும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரை பாதுகாக்க எந்த காரணமும் இல்லை.
'மனுவில் குறிப்பிட்டு உள்ள அனைத்தும், குற்றம்சாட்டப்பட்டவரின் கற்பனையான எண்ணத்தை பிரதிபலிக்கிறது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.
மேலும்
-
போலீஸ் செய்திகள்
-
எஸ்.கொடிக்குளத்தில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி
-
கண்மாயில் கருவேல மரங்கள், மடை சேதம் சிக்கலில் ஆனையூர் கண்மாய்
-
தொடருது..: மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்: குடும்ப தகராறு காரணமாக இருப்பது அதிகரிப்பு
-
வெயில் தாக்கத்தை குறைத்த திடீர் மழை
-
இன்று முதல் வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்கும்