எஸ்.கொடிக்குளத்தில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கூமாபட்டி ராமசாமியாபுரம் குடியிருப்பு பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுக்கடையை திறந்தே தீருவோம் என டாஸ்மாக் அதிகாரிகள் அடம்பிடிப்பதால் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி பகுதியான எஸ்.கொடிக்குளம் கூமாபட்டியை சுற்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய முழுநேர அரசு மருத்துவமனை இல்லாமல் அப்பகுதி மக்கள், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிரமத்துடன் வந்து செல்லும் நிலையில் வசித்து வருகின்றனர்.
இத்தகைய மருத்துவ வசதி செய்யப்படாத நிலையில் கூமாபட்டியில் ஏற்கனவே ஒரு மதுபான கடை செயல்பட்டு வரும் நிலையில், ராமசாமியாபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.
அப்போதெல்லாம் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்ததால் கடையை திறக்க முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தற்போது மதுக் கடையை திறந்தே தீருவோம் என டாஸ்மாக் அதிகாரிகள் முடிவெடுத்து நேற்று கடையை திறப்பதற்கு அதிகாரிகள் முயற்சித்தனர்.
இவர்கள் பாதுகாப்பிற்காக ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி ராஜா தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 70-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை அமைய உள்ள ரோட்டில் கல்லை வைத்து தடையை ஏற்படுத்தி, 200க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை மக்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலன், அ.தி.மு.க., கிளை செயலாளர் ராமச்சந்திரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகி வைரக்குட்டி உட்பட 10 பேரை போலீசார் பிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் கிராம மக்கள் சார்பில் ஒரு குழுவினர் நேற்று மாலை கலெக்டரை சந்தித்து டாஸ்மாக் கடையை திறப்பதை கைவிட கோரினர். ஆனால் நேற்று மாலை வரை எவ்வித தீர்வும் எட்டபடாததால் ராமசாமியாபுரத்தில் பதட்டமான நிலை நீடித்தது.
மேலும்
-
பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது
-
எங்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம் தேவை; கல்லுாரி மாணவர்கள் 'பளிச்'
-
மத்திய அமைச்சர் மீது அவதூறு: மின்னல் வேகத்தில் செயல்பட்டது போலீஸ்!
-
திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு: நடிகை ரூபிணியிடம் மோசடி செய்த பி.ஆர்.ஓ.,
-
பொன் மாணிக்கவேல் மீது வழக்கு; சி.பி.ஐ., மீது ஐகோர்ட் அதிருப்தி
-
புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி?