பி.எஸ்.பார்க்கில் கூடுதல் சிலைஅமைக்க அமைச்சர் ஆய்வு
பி.எஸ்.பார்க்கில் கூடுதல் சிலைஅமைக்க அமைச்சர் ஆய்வு
ஈரோடு:ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் முன்னாள் முதல்வர் காமராஜர், ஈ.வி.கே.சம்பத் ஆகியோரது சிலைகள், பெருந்துறை செல்வோருக்கான பஸ் ஸ்டாப் அருகே அமைந்துள்ளன.
பாலம், ரவுண்டானா அமைந்ததால், போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகள் உள்ளதாக வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். இதனால், இச்சிலைகளை உரிய அனுமதி பெற்று, ஈரோடு நீதிமன்றம் அருகே உள்ள பூங்காவில் அமைக்க, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அங்கு கூடுதலாக, திருப்பூர் குமரனுக்கும் சிலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வளாகத்தில் அம்பேத்கர், ஈ.வெ.ரா., - முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் மேடையில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் நுாலகம் செயல்படுகிறது. இவ்விடத்தை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்து, வரிசையாக சிலைகள் உள்ள பகுதியில் கூடுதல் சிலை அமைக்க இயலுமா எனவும், நுாலகத்துக்கு முன்புறம் உள்ள இடத்தில் அமைக்க இயலுமா எனவும் ஆய்வு செய்தார். பின், அந்த இடத்தை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சுத்தமாக பராமரிக்க யோசனை தெரிவித்தார்.
அங்குள்ள போட்டி தேர்வுக்கான நுாலகத்தில் படித்து கொண்டிருந்த மாணவ, மாணவியரிடம், 'கூடுதலாக என்ன வசதி தேவை' என கேட்டறிந்தார். வாகனங்கள் அதிகம் செல்வதால், உள்ளே அதிகமாக துாசு வருகிறது. கதவை மூடினால், வெப்பமாக உள்ளது. கூடுதலாக நுால்கள் வாங்கி வைக்கவும், கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று, வளாகத்தில் ஏ.சி., வசதி செய்யலாமா என உடனிருந்தவர்களிடம் கேட்டறிந்து, விரைவில் செயல்படுத்துவதாக உறுதியளித்தார். தவிர, அங்குள்ள கழிப்பறையை சுகாதாரமாக பராமரிக்கவும், கூடுதல் நுால்கள் வாங்கி வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.