ரூ.119 கோடியில் துறைமுகம்

மீன்வளத் துறையில் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள்:

நடப்பு நிதியாண்டில் 1,000 மீனவர் சமுதாயத்தை சேர்ந்த முதியோர்களுக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக ரூ.36.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒட்டர் மீன்பிடி சாதனம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். மேலும் 7,500 ரூபாய் மதிப்புள்ள ஐஸ் பாக்ஸ் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 2.63 கோடி ரூபாய் செலவாகும்.

உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க ஐந்து ஆண்டுகளாக குளங்களில் மீன் வளர்ப்பு தொழில் செய்யும் மீனவர்களுக்காக மீன்பிடி குளத்தை புதுப்பிக்க ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மீனவர்கள் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்துள்ள 100 மீனவ பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பிலான இழுவை வலை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 20 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.

பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 86.42 கோடி மதிப்பீட்டில் பெரிய காலாப்பட்டு, நல்லவாடு, தேங்காய்திட்டு பகுதிகளில் தற்போது மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் பகுதியில் ரூ.119.94 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் துவங்கப்படும்.

Advertisement