புதுச்சேரி பட்ஜெட் அறிவிப்புகள்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

இந்திய நில அளவை துறை தொழில்நுட்ப உதவியுடன் புதுச்சேரி அனைத்து பகுதிகளிலும் மறுநில அளவை ட்ரோன் சர்வே மூலம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய நில அளவை துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மறு நில அளவை பணிகள் முடிந்த பிறகு ஒவ்வொரு நில உரிமையாளர்களுக்கு தனித்துவமான நிலப்பகுதிக்குரிய அடையாள அட்டை எண் வழங்கப்படும்.

துணி பைகள் இயந்திரம்

சுற்றுச்சூழல் துறை: உலக வங்கி கடனுதவியுடன் புதுச்சேரி மாநிலத்தில் ரூ.1,433 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் கடலோர சுற்றுச்சூழலை மேம்படுத்த நீடித்து நிலைத்திருக்கும் கடல் வளம் மற்றும் பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

இதற்கான திட்ட முன் மொழிவு தயாரித்து பொருளாதார விவகார அமைச்சக ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வியாபார இடங்களிலும் துணிப்பைகள் வழங்கும் இயந்திரம் அமைக்கப்படும்.

குடும்ப ஓய்வூதிய திட்டம்

விடுதலைபோராட்ட வீரர்கள் நலம்: மத்திய அரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது போல், புதுச்சேரியிலும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியத்தை அவர்களது இறப்பிற்கு பின்னர் அவர்களை சார்ந்து வாழும் திருமணம் ஆகாத மகளிருக்கு வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மாணவி விடுதி

பிற்படுத்தப்பட்டோர்: பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் இலவச சைக்கிள், சுய தொழில் புரிபவர்களுக்கு வழங்கும் உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்படும். வில்லியனுார், காமராஜர் நகரில் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கும் விடுதிகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Advertisement