10,000 குடும்பங்களை வெளியேற்ற முயற்சி தனிநபர் செயல்பாட்டுக்கு எதிராக போராட்டம்

தஞ்சாவூர்:தனிநபர் ஒருவர் 10,000 குடும்பங்கள் காலம் காலமாக வாழ்ந்து வரும் பகுதி தனக்கு சொந்தமானது எனக் கூறி, அங்கிருந்து மக்களை வெளியேற்ற முயல்வது பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.


இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் வணிகர்களை ஒன்று திரட்டி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடையடைப்பு



தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மகாராஜ சமுத்திரம் பகுதியில் வசிப்பவர் ஆனந்தகுமார். இவர், மராட்டிய வசம்சத்தைச் சேர்ந்த காட்கே ராவ் சாகேப் குடும்ப உறுப்பினர்.

பட்டுக்கோட்டை மகாராஜ சமுத்திரத்தில் உள்ள லட்சத்தோப்பு, பெருமாள் கோவில், சிவக்கொல்லை ஆகிய பகுதியில் உள்ள சுமார் 2,500 ஏக்கர் நிலம், தனக்கு சொந்தமானது எனக் கூறி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆனால், குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வசிக்கும் 10,000த்துக்கும் அதிகமான குடும்பத்தினர், தங்கள் வசிக்கும் பகுதிக்கு முறையாக பட்டா பெற்றுள்ளதோடு, அரசு வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டி உள்ளனர். வீடு கட்ட நகராட்சியிடம் இருந்து முறையான அனுமதியும் பெற்றுள்ளனர்.

ஆனாலும், கீழமை நீதிமன்ற உத்தரவு ஒன்றை வைத்துக் கொண்டு, ஆனந்தகுமார், 10,000 குடும்பங்களையும் அப்பகுதியில் இருந்து விரட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்காக பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ, ரங்கராஜன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜவஹர் பாபு உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு, ஆதவரவளித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, பட்டுக்கோட்டை பகுதி வணிகர்களும் கடையடைப்பு நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பேசியதாவது:

மஹாராஷ்டிரா மன்னர் குடும்பத்தைச் சார்ந்த ஆனந்தகுமார், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் நிலம் தனக்கு சொந்தமானது எனக் கூறி,உயர் நீதிமன்றம் வரை சென்றார்.

வழக்கை இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செல்லக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், கீழமை நீதிமன்ற உத்தரவை வைத்து, மக்களை மிரட்டி, அவர்களை காலி செய்ய வைக்க முயற்சித்து வருகிறார்.

தீர்வு சொல்ல வேண்டும்



இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக தீர்வு சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023க்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். கோவில், ஆதீனங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை விவசாயிகள் சட்டப்படி குத்தகை உரிமை பெற்று சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால், சட்ட விரோத அபகரிப்பாளர்கள் என்ற பட்டியலில் விவசாயிகளையும் ஏழை எளிய வாடகை குடியிருப்புவாசிகளையும் இணைத்து, ஏலம் விடும் நடவடிக்கை எடுக்கின்றனர். அதை கண்டித்து, மயிலாடுதுறையில் வரும் 25ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement