கலெக்டரின் கையெழுத்திட்டு பள்ளிகளில் வசூலித்தவர் கைது

நாகர்கோவில்:கலெக்டர் கையெழுத்தை போலியாக போட்டு பள்ளிகளில் பணம் வசூலித்த மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவிலில் தனியார் பள்ளியில் குழந்தைகளின் திரைப்படத்தை திரையிட, கலெக்டர் அனுமதி இன்றி, கலெக்டர் பெயரில் கடிதம் எழுதி, அதில் போலியாக கையொப்பமிட்டு, பி.ஆர்.ஓ., முத்திரையிட்டு பணம் வசூல் செய்ததாக, பி.ஆர்.ஓ., ஜான் ஜெகத் பிரைட், நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரித்து, நாகர்கோவில், என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணகுமார், 44, என்பவரை கைது செய்தனர்.

உறவினர் ஒருவர் வாயிலாக சென்னையில் இருந்து தொடர்பு கொண்ட சிலர், அவர்கள் அனுப்பி வைக்கும் கடிதத்தை பள்ளிகளில் காண்பித்து பணம் வசூலித்து தருமாறு கூறியதாகவும், அதன்படி, 65,000 ரூபாய் வசூல் செய்ததாகவும், தனக்கு 5,000 ரூபாய் மட்டும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

சரவணகுமார் திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவர அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement