பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி

3

புதுடில்லி: 'பயங்கரவாதிகளின் மையமாக திகழ்வது எந்த நாடு என்பது உலகிற்கே தெரியும். மற்ற நாடுகளின் மீது பழியை போடுவதற்கு பதிலாக, உங்கள் உள்நாட்டில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துங்கள்', என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்ற கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயிலை பயங்கரவாதிகள் கடத்தினர். தண்டவாளத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பிறகு, பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு, மக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மீட்டனர்.

உலகளவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பலூச் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் சப்கத் அலி கான் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எங்களது கொள்கையில் இருந்து நாங்கள் மாறவில்லை. அதுபோல உண்மையும் மாறாது. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை இந்தியா ஆதரிக்கிறது. உலகளவிலான படுகொலை பிரசாரத்தை இந்திய முன்னெடுத்து வருகிறது," எனக் கூறினார்.

பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், " பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம். பயங்கரவாதிகளின் மையமாக திகழ்வது எந்த நாடு என்பது உலகிற்கே தெரியும். மற்ற நாடுகளின் மீது பழியை போடுவதற்கு பதிலாக, உங்கள் உள்நாட்டில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துங்கள்," என்றார்.

இந்தியாவைப் போல ஆப்கானிஸ்தானும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததுடன், 'உங்களின் உள்நாட்டு பாதுகாப்பில் அக்கறை செலுத்துக்கள்', என தெரிவித்துள்ளது.

Advertisement