முதல்வர் தொடங்கிய திட்டத்துக்கு பூஜை பா.ம.க., எம்.எல்.ஏ.,வால் பரபரப்பு

ஓமலுார்:ஓமலுார் அருகே முதல்வர் துவக்கிவைத்த திட்டப்பணிக்கு பூஜை போட முயன்ற பா.ம.க., எம்.எல்.ஏ.,வை தி.மு.க.,வினர் தடுத்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலுார் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலகுட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. அதன் அருகே இடம் ஒதுக்கி பள்ளிக்கூடம் கட்ட 2.18 கோடி ரூபாய் நிதியில் கடந்த பிப்.13ல் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸில் பணியை தொடங்கி வைத்தார்.

இப்பள்ளி சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்டது என்பதால் பா.ம.க.,வை சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ., அருள் தலைமையிலான கட்சியினர் பூஜை நடத்த நேற்று காலை வருவதாக தகவல் வெளியானது. இதனால் தி.மு.க., ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கோபால்சாமி, ஓமலுார் தெற்கு ஒன்றிய துணை செயலர் வெங்கடேஷ் தலைமையிலான கட்சியினர் திரண்டனர். முன்னெச்சரிக்கையாக ஓமலுார் போலீசாரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் வந்த எம்.எல்.ஏ., அருள், சாலையை மறித்து நின்றிருந்த தி.மு.க.,வினரை கடந்து, தனது ஆதரவாளர்களுடன் பூஜை நடத்த சென்றார். பூஜையை ஆரம்பித்ததும் தி.மு.க.,வினர் - பா.ம.க.,வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆவேசமாக கூச்சலிட பரபரப்பானது. ஒருவரை ஒருவர் வசைபாட மற்றொரு பக்கம் பூஜை போடப்பட்ட பொருட்களை தி.மு.க.,வினர் எடுத்து வீசினர். கூட்டத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.,வை போலீசார் மீட்டு அழைத்துச்சென்று சமாதானப்படுத்தி அனுப்பினர்.

'முதல்வரிடம் நீதி கேட்பேன்'



சம்பவம் குறித்து எம்.எல்.ஏ., அருள் கூறும்போது, ''துவக்கப்பட்ட பணியை பார்வையிட வந்தேன். பூஜை செய்ய வரவில்லை. இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க.,வினர் என்னை நெஞ்சில் கைவைத்து தள்ளினர். இதுகுறித்து முதல்வரிடம் நீதி கேட்பேன்,'' என்றார்.

Advertisement