பள்ளி இறுதித்தேர்வு சுற்றறிக்கையில் ஆண்டு தவறாக வந்ததால் குழப்பம்

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை, சுற்றறிக்கை, பள்ளி கல்வி இயக்குனரகத்தால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் ஏப்., 8 முதல், 24 வரை, வகுப்பு வாரியாக தேர்வு நடக்கும் நாட்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆனால் தேர்வு நாளுக்கு பின், 2025க்கு பதில், 2024 என குறிப்பிடப்பட்டிருந்ததால், ஒருவேளை பழைய சுற்றறிக்கையோ என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

தொடக்க கல்வி, தனியார் பள்ளி, பள்ளி கல்வி ஆகிய இயக்குனர்கள் கையொப்பமிட்ட சுற்றறிக்கையில், தேர்வு நாள் குறித்த அட்டவணையில், 2025க்கு பதில், 2024 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு நாளுக்கும், 2024 என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பழைய சுற்றறிக்கையை அனுப்பி விட்டார்களோ என்ற குழப்பம் ஏற்பட்டது. பலரும் குறையை சுட்டிக்காட்டிய பின், சில மணி நேரத்தில் மீண்டும் நடப்பு ஆண்டு திருத்தப்பட்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது நிருபர்-

Advertisement