கொழுமம் கோயிலில் பழநி கல்லுாரி மாணவிகள் ஆய்வு

பழநி: கொழுமம் வீர சோழீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆய்வில் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி மாணவிகள் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் கொழுமம் வீர சோழீஸ்வரர் கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலின்படி பேராசிரியை செந்தமிழ்ச்செல்வி, முத்து விஜயலட்சுமி முன்னிலையில் பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி தமிழ் துறை மாணவிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் கூறியதாவது : கொழுமம், அமராவதி ஆற்றங்கரை மண்ணில் புதைந்திருந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கோயில் அருகே உடைந்த குமுதக் பகுதியில் ஐந்து வரிகள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றவை சிதைந்துள்ளன. இதில் கொங்கு சோழ மன்னர் மூன்றாம் விக்ரமசோழரின், இரண்டாம் ஆண்டில் கி.பி., 1275 பொறிக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையை பற்றி கூறும் கல்வெட்டு ஆதி சைவ சக்கரவர்த்தி உய்யவந்தான் கொடையை பெற்றுக்கொண்டு, இவ்வூர் இடக்கை சாதியினர் எனும் 98 நியாயத்தார் முன்னிலையில் கல்வெட்டு செய்தியை காப்பதாக கூறுகிறது. இதன் மூலம் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் அர்ச்சகர்களாக கொங்கு பகுதியில் கோயில்களில் இருந்ததை உணர்த்துகிறது. சோழர் ஆட்சியில் வலக்கை, இடக்கை பிரிவு பற்றியும் 98 ஜாதினர் பற்றியும் கூறுகிறது. இதன் மூலம் கொங்கு சோழர் ஆட்சியில் நிறைய சமூக சூழல் நமக்குத் தெரிய வருகிறது என்றனர்.குழுவினருடன் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள் சுதாராணி, காசிமணி உடன் இருந்தனர்.

Advertisement