அரிவாள், கத்திகள் தயாரிப்பு பட்டறைகளில் 'சிசிடிவி' கட்டாயம் : ஐ.ஜி.,க்கள் உத்தரவு

6

சென்னை : 'கத்தி, அரிவாள், சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில், 'சிசிடிவி' கட்டாயம் பொருத்த வேண்டும்' என, காவல் துறை மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:



கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, காவல் நிலைய எல்லைகள் தோறும், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்போர், அவர்களின் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க வேண்டும்


எத்தனை இடங்களில், ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகள் உள்ளன என்ற தகவலை திரட்ட வேண்டும்


விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்குதான், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குகின்றனர் என்பதை, உறுதிப்படுத்தும்படி, பட்டறை உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். மற்ற காரணங்களுக்காக வருவோருக்கு ஆயுதங்கள் விற்கக் கூடாது. ஆயுதம் வாங்க வருவோர் குறித்து சந்தேகம் எழுந்தால், போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும்


ஆயுதங்கள் தயாரிக்கும் எல்லா பட்டறைகளிலும், 'சிசிடிவி' கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். இதில் பதிவாகும் காட்சிகள், வாடிக்கையாளர்களின் முகம் தெரியும்படி இருக்க வேண்டும்


ஆயுதங்கள் வாங்கிய நபர்களின், தொடர்பு எண்களை எழுதி, பதிவேடு பராமரிக்க வேண்டும். இந்த விபரங்களை, பட்டறை உரிமையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement