வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த கமிட்டி மேல்சபையில் அரசு - எதிர்க்கட்சிகள் காரசாரம்

பெங்களூரு: ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டிக்கு, தன் கட்சியினரை நியமித்துள்ள காங்கிரஸ் அரசின் முடிவு, நேற்று மேல்சபையிலும் எதிரொலித்தது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே, காரசாரமான வாக்குவாதம் நடந்தது.

கர்நாடக மேல்சபை கூடியதும், உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப, சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அனுமதி அளித்தார்.

அப்போது வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கமிட்டிக்கு, காங்கிரஸ் தொண்டர்களை நியமித்தது குறித்து, முதல்வர் சித்தராமையாவிடம், ம.ஜ.த., உறுப்பினர் ஷரவணா கேள்வி எழுப்பினார்.

முதல்வர் சார்பில் துணை முதல்வர் சிவகுமார்: சட்டசபையில் நீங்கள் செய்த அரசியலை, மேல்சபையிலும் செய்ய முற்பட்டுள்ளீர்கள். நீங்கள் அரசியல் செய்வதில், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. நாங்களும் அரசியல் செய்தோம். உங்களின் போராட்டத்துக்கு நாங்கள் பணியமாட்டோம்.

பா.ஜ., - பாரதி ஷெட்டி: மாநில மக்கள் உங்களுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளனர். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

காங்., - பல்கிஷ் பானு: இடைத்தேர்தலில் மாநில மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டினர்.

அமைச்சர் போசராஜு: வாக்குறுதித் திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்யும் பணியை மும்பையை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளோம். அஜீம் பிரேம்ஜி உட்பட, பல நிறுவனங்கள் கட்டணம் பெறாமல், ஆய்வு செய்து தருகின்றன.

வாக்குறுதித் திட்டங்களை பற்றி ஆய்வு செய்ய, எம் 2 எம் நிறுவனத்துக்கு, மகளிர், குழந்தைகள் நலத்துறை சார்பில் 29.50 லட்ச ரூபாய், உணவுத்துறை சார்பில் 29.50 லட்ச ரூபாய், போக்குவரத்துத் துறை சார்பில் 29.50 லட்ச ரூபாய், மின் துறை சார்பில் 25.366 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

ம.ஜ.த., - ஷரவணா: நான் பதிலை பார்த்தேன். நாங்கள் கேட்டுள்ள தகவலை தாருங்கள். கிரஹ லட்சுமி திட்டத்தால், மாமியார், மருமகள் இடையே சண்டையை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

துணை முதல்வர் சிவகுமார்: பயனாளிகளை பணம் சரியாக சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு செய்கிறோம். இந்த பொறுப்பை சில ஏஜென்சிகளிடம் அளித்தோம். அதற்கு நிர்ணயித்த நிதியை ஒதுக்க வேண்டும்.

திட்டங்களை செயல்படுத்த கமிட்டி அமைத்துள்ளோம். கமிட்டி உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்குகிறோம். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்.

துணை முதல்வரின் பதிலால், திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'மக்களின் வரிப்பணத்தை, கமிட்டியினருக்கு ஏன் ஊதியம் அளிக்கிறீர்கள்? அரசின் பணம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏன் தருகிறீர்கள்? பயனாளிகளுக்கு தாருங்கள்.

பதில் சரியில்லை' என கூறி, பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் மேல்சபை தலைவரின் இருக்கைக்கு முன்பாக சென்று, போராட்டம் நடத்த முற்பட்டனர்.

சிவகுமார்: நீங்கள் அரசியல் செய்யுங்கள். நாங்களும் அரசியல் செய்கிறோம். வாக்குறுதித் திட்டங்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை தெரிந்து கொள்ள, தொண்டர்களுக்கு பணம் கொடுத்து, ஆய்வு செய்கிறோம்.

பா.ஜ., - ரவிகுமார்: அதிகாரிகளின் வேலை என்ன; அவர்கள் எதற்காக உள்ளனர்? அவர்களை விட்டு விட்டு, அரசின் கருவூலத்தில் இருந்து, காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏன் பணம் தருகிறீர்கள்?

சிவகுமார்: உங்கள் பேச்சை நாங்கள் பொருட்படுத்தமாட்டோம்.

பாரதி ஷெட்டி: நீங்கள் பொருட்படுத்தாவிட்டால், மக்கள் பொருட்படுத்த வைப்பர்.

மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி: காங்கிரஸ் தொண்டர்கள் அடங்கிய, வாக்குறுதித் திட்டங்கள் செயல்படுத்தும் கமிட்டியை ரத்து செய்ய வேண்டும்.

திட்டங்களை ஆய்வு செய்யும் பொறுப்பை, ஏஜென்சிகளிடம் அளித்துள்ளீர்கள். அப்படி இருக்கும்போது, கமிட்டி அவசியமா? கமிட்டியினருக்கு மக்களின் பணத்தை கொடுத்து வீணாக்குவதன் கட்டாயம் என்ன?

ஷரவணா: வாக்குறுதித் திட்டங்கள் பெயரில், லட்சம், லட்சமாக பில் தொகை வழங்கியுள்ளீர்கள். இதற்காக தனியார் ஏஜென்சியை நியமித்துள்ளீர்கள். தனித்தனி துறை சார்பில் பணம் வழங்கினீர்கள்.

திட்டங்களை ஆய்வு செய்யும் ரைட் டு பீப்பல்ஸ் நிறுவனத்துக்கு மட்டும், ஓராண்டுக்கு 1.03 கோடி ரூபாய் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த கட்டத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. யார் என்ன பேசுகின்றனர் என்பதே புரியாத கூச்சல், குழப்பம் உருவானது.

Advertisement