பி.டி.ஓ., தேர்வு முடிவு விரைவில் வெளியீடு மேல்சபையில் அமைச்சர் பிரியங்க் கார்கே உறுதி

பெங்களூரு: “காங்கிரஸ் அரசு வந்த பின், பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகளை நியமிக்க, கே.பி.எஸ்.சி., மூலமாக தேர்வு நடத்தியுள்ளோம்.

விரைவில் முடிவு வெளியாகும்,” என, மாநில கிராம மேம்பாட்டு, பஞ்சாயத்து துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:

சட்டசபை உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள், தங்களின் தனி உதவியாளராக, பி.டி.ஓ.,க்களை நியமித்திருந்தனர்.

நான் துறை பொறுப்பை ஏற்ற பின், பி.டி.ஓ.,க்களை தனி உதவியாளராக நியமிக்கக் கூடாது என, நான் உத்தரவிட்டேன். இதுகுறித்து, சட்டசபை, மேல்சபை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

ஏற்கனவே 78 பி.டி.ஓ.,க்கள், எம்.எல்.ஏ.,, களின் தனி உதவியாளராக பணியாற்றுகின்றனர்.

இதனால் கிராம பஞ்சாயத்துகளை நிர்வகிப்பது கஷ்டமாக உள்ளது. இது தொடர்பாக, மேல்சபை தலைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

காங்கிரஸ் அரசு வந்த பின், பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகளை நியமிக்க, கே.பி.எஸ்.சி., மூலமாக தேர்வு நடத்தியுள்ளோம். விரைவில் முடிவு வெளியாகும்.

பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் விதிகளின்படி நடக்கும், சீர்குலைந்த நிர்வாகத்தை சரி செய்வது, அனைவரின் பொறுப்பு. நாம் எம்.எல்.ஏ.,க்கள்.

புதிய சட்டங்கள் வகுப்பது, நம் கடமை. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சாலைகள் மேம்பாட்டுக்கு போதுமான நிதி வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அவற்றை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, சாலைகளை சீரமைக்க வேண்டும்.

வர்த்தக பணிகளுக்கான கனரக வாகனங்கள் இயங்குவதால், சாலைகள் பாழாவது சகஜம். இதற்கு மாவட்ட பஞ்சாயத்து சாலைகளை தரம் உயர்த்துவதே, ஒரே தீர்வாகும்.

பஞ்சாயத்து அனுமதி இல்லாமல், சாலைகளை சீரமைத்தது, விதிமீறலாக நடந்து கொண்டது குறித்து, விண்ட் ஆண்ட் மில் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement