சிறையில் போதை பொருட்களை கண்டுபிடிக்க மோப்ப நாய் படை

பெங்களூரு: ''அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சிறைக்குள் நடக்கும் குற்றங்கள், முறைகேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நாயக் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:

அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, சிறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு கடிவாளம் போடப்படுகிறது. அதிக சக்தி கொண்ட ஜாமர்கள் பொருத்தி, குற்றவாளிகளுக்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் நடவடிக்கை எடுத்து, சிறைக்குள் நடக்கும் குற்றங்கள், முறைகேடுகளை தடுக்க முயற்சிக்கிறோம். பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் 250க்கும் மேற்பட்ட ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிறைக்குள் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக, 240க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில வழக்குகளில் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் முறைகேடு நடப்பது, புதிய விஷயம் அல்ல; பல காலமாக நடக்கிறது. இது அரசின் கவனத்துக்கும் வந்துள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து, முறைகேடுகளை தடுக்கும்.

சிறையில் உள்ள சில ஊழியர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கே.ஏ.எஸ்., - ஐ.ஏ.எஸ். அளவிலான அதிகாரிகளை நியமித்து, கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.

பரப்பன அக்ரஹாராவிலும் முறைகேடுகள் நடந்தன. இங்கும் ஜாமர்கள் பொருத்தியுள்ளோம். இந்த ஜாமர்களால் சுற்றுப்பகுதிகளின் வீடுகளில் மொபைல் நெட்ஒர்க் பிரச்னை ஏற்படுகிறது. எனவே வல்லுநர்களின் ஆலோசனை கேட்டுள்ளோம்.

பெங்களூரில் மட்டுமே, 280 ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் போதைப்பொருள் சப்ளை ஆவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை கண்டுபிடிக்க, சிறப்பு மோப்ப நாய் படை அமைக்கப்படும். சோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம்.

ஒன்பது வழக்குகள் தொடர்பாக, 22 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஹின்டல்கா சிறையில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, நாங்கள் விசாரணை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement