எடியூரப்பாவிடம் விசாரிக்க ஐகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி

பெங்களூரு:'போக்சோ' வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை, உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 82. இவர், தன்னிடம் உதவி கேட்டு வந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணைக்கு பின், கடந்த ஆண்டு ஜூன் மாதம், போக்சோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகும்படி, கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி சிறப்பு நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத்தாக்கல் செய்தார்.
பல கட்ட விசாரணைக்கு பின், சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் அவருக்கு முன்ஜாமினும் கிடைத்தது.
என்ன அர்த்தம்?
இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த சில அம்சங்கள் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி எடியூரப்பாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நோட்டீசில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பிரதீப் சிங் யெரூர் நேற்று விசாரித்தார்.
எடியூரப்பா தரப்பு மூத்த வக்கீல் நாகேஷ் வாதிடுகையில், ''இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நாளில் இருந்து, ஒரு மாதம் 12 நாட்களுக்கு பின், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான முந்தைய வழக்கில், சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
''தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. இந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை, விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.
ஆஜராக விலக்கு
அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசி கிரண் ஷெட்டி வாதிடுகையில், ''முந்தைய வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தற்காலிக நிவாரணம் வழங்கப்பட்டது.
''வழக்கை தொடர்ந்து நடத்த விசாரணை நீதிமன்றத்தின் முன் போதுமான ஆதாரம் உள்ளது. இடைக்கால தடை பிரதிவாதிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு, விசாரணை நடத்த அனுமதி தர வேண்டும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதீப் சிங் யெரூர், ''இந்த மனு மீது அடுத்த விசாரணை நடக்கும் வரை, மனுதாரரிடம் விசாரணை நடத்த தடை விதிக்கப்படுகிறது.
''விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மனும் நிறுத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து, மனுதாரருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது,'' என்றார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், எடியூரப்பாவுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.