ரூபாய் குறியீடு சர்வதேச போட்டிக்கானது: பா.ஜ., சீனிவாசன் விளக்கம்

5



மதுரை : ''ரூபாய் குறியீடு சர்வதேச அளவில் போட்டியிடுவதற்குத்தானே தவிர, தமிழகத்தோடு போட்டியிட அல்ல' என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா'' என பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:



ரூபாய் குறியீடு என்பது சர்வதேச அளவில் இருக்கும் பல கரன்சி குறியீடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கும் ஒரு குறியீடு இருக்க வேண்டும் என்பதற்குரியது. இது அமெரிக்க டாலரின் குறியீட்டுக்கு போட்டியிடுவதற்குதானே தவிர, தமிழகத்தோடு போட்டியிடுவதற்கு அல்ல. 2010ல் தி.மு.க., மத்திய ஆட்சியில் இருந்தபோதுதான் ரூபாய்க்கான இக்குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா. அப்போதெல்லாம் நீங்கள் துாங்கிக் கொண்டு இருந்தீர்களா.


ரூபாய் என்ற வார்த்தையின் மூலச்சொல் தமிழ் அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. இப்போது அதைத்தானே பயன்படுத்த முன்வந்திருக்கிறீர்கள். நம்தேசிய கீதம் 'ஜன கண மன' வங்க மொழியில் பாடப்படுகிறது. அது தமிழ் இல்லை என்பதால் உங்கள் தி.மு.க., அரசு, தேசிய கீதத்தை புறக்கணிக்க முடியுமா. நான் இதற்கு உங்களிடம் பதிலை எதிர்பார்க்க மாட்டேன். ஏனென்றால் நாங்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement