வயதான ஆண்களுடன் கட்டாய திருமணம்; அசாம் சிறுமியரை கடத்திய கும்பல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வயதான ஆண்களை திருமணம் செய்ய, அசாமில் இருந்து கடத்தப்பட்ட இரு சிறுமியரை அம்மாநில போலீசார் நேற்று பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், கச்சார் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர், தன், 15 வயது மகளை காணவில்லை என, கடந்த ஜனவரியில் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த போலீசார், அந்த பகுதியில் அதே வயதுடைய மற்றொரு சிறுமி காணாமல் போனதையும், சில நாட்களுக்கு பின், சிறுமி வீடு திரும்பியதையும் கண்டுபிடித்தனர். சமீபத்தில், அந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, 'அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி, என்னையும், மற்றொரு சிறுமியையும் தெலுங்கானாவின் ஹைதராபாதுக்கு அழைத்துச் சென்று, பின், ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வயதான ஆண்களை திருமணம் செய்யும்படி எங்களை வலியுறுத்தினர். அங்கிருந்து நான் தப்பி வந்து விட்டேன்' என்றார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் போலீசாரின் உதவியை நாடினர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கிராமம் அருகே லீலா ராம் என்பவரது வீட்டில், கடத்தப்பட்ட மற்றொரு சிறுமியை அசாம் போலீசார் நேற்று பத்திரமாக மீட்டனர்.
அந்த சிறுமியை, 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக லீலா ராம் கூறினார். அவரை கைது செய்து அசாமுக்கு போலீசார் அழைத்து வந்தனர். இதே போல், அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமியை, ராஜஸ்தானின் மன்புரா என்ற பகுதியில் அசாம் போலீசார் நேற்று மீட்டனர்.
கச்சார் எஸ்.பி., நுமல் மஹட்டா கூறுகையில், “அசாமின் தேயிலை தோட்டங்களில் உள்ள பழங்குடி பெண்களை குறிவைத்து இந்த மனித கடத்தல் நடந்துள்ளது.
பராக் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ரூபாலி தத்தா, கங்கா கஞ்சு ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையோர் விரைவில் கைது செய்யப்படுவர்,” என்றார்.
