ஓய்வு பெற்ற ஆசிரியர் வாழ்க்கையில் விளையாடும் அரசு, பல்கலைக்கழகம்: ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி

பெங்களூரு : ஓய்வு பெற்று ஆறு ஆண்டுகள் ஆகியும், பேராசிரியருக்கு ஓய்வூதியம் வழங்காத அரசு மற்றும் ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா கண்டித்தார்.

'ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். நான்கு வாரத்துக்குள் அவருக்கு சேர வேண்டிய ஓய்வூதியத்தை செலுத்த வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.


பெலகாவியை சேர்ந்தவர் தாவலேஸ்வர், சங்கொல்லி ராயண்ணா கல்லுாரியில் 1982ல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போது இந்த கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரியாக இருந்தது.


30 ஆண்டுகளுக்கு பின், புதிதாக அமைக்கப்பட்ட ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.


இதையடுத்து, அவர் பல்கலைக்கழக பேராசிரியரானார். அடுத்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2015 ஆகஸ்ட் 31ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஓய்வு பெற்ற பிறகு எந்த சலுகையும் அவருக்கு கிடைக்கவில்லை.

சலுகைகள்



இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தாவலேஸ்வர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்து வந்தது.

தாவலேஸ்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது:

ஓய்வு பெற்றதற்கான சலுகைகள் குறித்து பல்கலைக்கழகத்துக்கும், அரசுக்கும் பல முறை கடிதம் எழுதி உள்ளார். அரசு தரப்பில் இருந்து வந்த கடிதத்தில், பல்கலைக்கழக ஊழியர்கள் ஓய்வு பெற்றால், பல்கலைக்கழகம் தான் அதற்கான தொகையை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.


ராணி சென்னம்மா பல்கலைக் கழகத்துடன், கல்லுாரி இணையும் வரை 30 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல்கலைக்கழகத்துடன் இணைந்த பின், மூன்று ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றார்.


தனக்கான சலுகைகளை தருமாறு தாவலேஸ்வர் கேட்டபோது, நீங்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே இங்கு பணியாற்றி உள்ளீர்கள். எனவே, 33 ஆண்டுகளுக்கான 'கிராஜுவிட்டி' வழங்க முடியாது' என்று பல்கலைக்கழகத்தினர் கூறிவிட்டனர். இதுவரை அவருக்கான தொகை கிடைக்கவில்லை.



இவ்வாறு அவர் வாதிட்டார்.

அரசு மறுப்பு



அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'மனுதாரர் முதலில் அரசு உதவி பெறும் கல்லுாரியில் தான் இணைந்தார். அதன் பின்னரே, பல்கலைக்கழகத்தில் இணைந்தார். எனவே, அவருக்கு பென்ஷன் பெறும் தகுதி இல்லை.



இத்துடன், ஓய்வு பெற்றதற்கான அனைத்து சலுகையும் அவருக்கு வழங்க முடியாது' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா கூறியதாவது:

மனுதாரர் 33 ஆண்டுகள் பணியாற்றியபோதும், அவருக்கு முழு ஓய்வூதியம், விடுப்பு பணம், பணிக்கொடை ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. அரசும், பல்லைக்கழகமும், மனுதாரரின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது.



ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளாக அவருக்கு சேர வேண்டிய நியாயமான ஓய்வூதியத்துக்காக, அரசு, பல்கலைக்கழக அலுவலகங்களுக்கு நடையாய் நடந்துள்ளார். அவருக்கான நியாயமான ஓய்வூதியம் பறிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் ஒருவருக்கு உரிமையான தொகையை, பத்து ஆண்டுகளாக மறுப்பதற்கான, அரசு தரப்பு வாதம் சரியல்ல.
எனவே நான்கு வாரங்களுக்குள் மனுதாரருக்கு சேர வேண்டிய அனைத்துவித ஓய்வூதிய சலுகைகளை வழங்க வேண்டும். இல்லை என்றால், மனுதாரர் மூலம், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advertisement