5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்

1


மும்பை: 'இந்தியா முழுவதும் பஹேலியா மற்றும் பவேரியா கொள்ளை கும்பல் 5 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றுள்ளனர்' என்பது வனத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்தியா புலிகளைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றிருந்தாலும், வேட்டையாடுதல் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாகவே உள்ளது. சில இடங்களில் புலிகளை வேட்டையாடும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.


மஹாராஷ்டிரா வனத்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) வன விலங்குகள் வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தியது. இதில், நாட்டில் உள்ள வேட்டை கும்பல்கள், குறிப்பாக பஹேலியா மற்றும் பவேரியா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பற்றி அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.



இந்த கும்பல், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட புலிகளின் மரணத்திற்குக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. 2020ம் ஆண்டு முதல் ஜனவரி 2025ம் ஆண்டு வரை, மஹாராஷ்டிராவில் மட்டும் வேட்டையாடுதல் காரணமாக 41 புலிகள் மற்றும் 55 சிறுத்தைகள் இறந்துள்ளன.


இது தொடர்பாக 2024ம் ஆண்டில் மட்டும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், உறுதியான ஆதாரங்கள் இல்லாததால், கொல்லப்பட்ட புலிகளின் சரியான எண்ணிக்கையை தீர்மானிப்பது சவாலாக இருப்பதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கத்யன், எகிலால் மற்றும் சூர்யா ஆகிய மூன்று முக்கிய சந்தேக நபர்களை வன அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். புலிகளின் உடல் பாகங்களை சட்ட விரோதமாக வர்த்தகம் செய்வதில் இந்த நபர்கள் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement