மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

3


சென்னை: மக்காச்சோள உற்பத்தியை மேம்படுத்த ரூ. 40 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்காச்சோளத்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் கால்நடைத் தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த, புரதம், மாவுச்சத்து நிறைந்த வீரிய ரகங்களை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக திட்டங்கள் வகுத்து, வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 15) மக்காச்சோள உற்பத்தி மேம்படுத்த ரூ. 40 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர் செல்வம் கூறியதாவது:



மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் படி, மானாவாரியிலும் அதிக மகசூல் தந்து, உழவர்களுக்கு போதிய வருமானத்தை கிடைக்க செய்வதில் மக்காச்சோள பயிர் முன்னிலை வகிக்கிறது.


தமிழகத்தில் மக்காச்சோளம் 10 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்காச்சோளம் சாகுபடி மூலம், உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்யும் வகையில், மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம் ஒரு லட்சத்தி 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயன் அடையும் வகையில், ரூ.40 கோடியே 27 லட்சத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement