அரசு வேலைவாய்ப்பில் யார் சொல்வது பொய்; முதல்வரா, அமைச்சரா என அன்புமணி கேள்வி

சென்னை; தி.மு.க., ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது?முதல்வர் ஸ்டாலின் சொன்னது பொய்யா, அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது பொய்யா என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும், சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புள்ளி விவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது.
வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தி.மு.க., அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். நிதி நிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,''அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்” என்று கூறியிருந்தார். அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிரந்தரப் பணியாளர்கள் ஆவர்.
உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இவர்களின் பணி நிலை குறித்த துல்லியமான விவரத்தை வெளியிடும் படி பா.ம.க., பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின்,''கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணி நியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது '' என்று கூறியிருந்தார்.
முதல்வர்.ஸ்டாலின் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை மறுக்க வில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு 25 ஆயிரம் உயர முடியும்?
அதேபோல், மொத்தப் பணியாளர் எண்ணிக்கை உயரும் போது உள்ளாட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும் அல்லது அதே எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால், அவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 709லிருந்து 21,866 ஆக 11 ஆயிரம் பேர் குறைந்தது எப்படி?
அதேபோல், வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 பணிகளுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த 7 பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் கூட தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் பேரை எவ்வாறு தேர்வு செய்ய முடியும்?
ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறது.
அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு இருவரும் தெரிவித்த புள்ளி விவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மேலும்
-
அமிர்தசரஸ் கோவிலில் கையெறி குண்டு வீச்சு: பாக்.,கிற்கு தொடர்பு என போலீசார் சந்தேகம்
-
கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு; தெலங்கானாவில் பயங்கரம்
-
தத்தெடுப்புக்கு 2000 குழந்தைகள் காத்திருப்பு: மேற்குவங்கத்தில் தான் அதிகம்
-
நினைவில் வாழும் டாக்டர் சாந்தா
-
அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா
-
அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்; எலான் மஸ்க் நம்பிக்கை