அரசு கட்டுமான பணியில் தரம் முக்கியம்; சில இடங்களில் தரம் இல்லை என்கிறார் சிதம்பரம்!

சிவகங்கை:''அரசு திட்டங்களில் கோடிக்கணக்கில் முதலீடு என்பது மட்டும் போதாது. தரமும் முக்கியம். அரசு கட்டடங்கள், பாலம், நெடுஞ்சாலை, மாவட்ட சாலை எல்லாம் தரமாக இருக்க வேண்டும். சில இடங்களில் தரமாக இல்லை,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நகர் காங். அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தமிழக பட்ஜெட் குறித்து கூறியதாவது: தமிழக அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது.
முதலில் நிதி மேலாண்மையை பாராட்டலாம். தமிழக அரசின் மொத்த கடன் 9 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்தில் அடங்கும். 3 சதவீததில் நிதிப்பற்றாக்குறையை அடக்கியது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீதம் ஆகும். 2022ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரத்து 320 கோடி ரூபாய் ஆகும். தி.மு.க., ஆட்சியின் இறுதி ஆண்டில் தற்போது 41 ஆயிரத்து 610 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதாவது 21 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது.
இரண்டாவதாக, 2025-26 பட்ஜெட்டில் அரசு சார்பில் முதலீடு 57 ஆயிரத்து 231 கோடி ஆகும். நடப்பாண்டை விட 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலீடு செலவுக்கேற்பத்தான் வளர்ச்சி இருக்கும். தமிழ்நாடு பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சிபெற்றுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதற்கு 57,231 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
முதலீடு செய்வது, திட்டங்களை நிறைவேற்றுவது சரிதான். ஆனால் தரத்தையும் பார்க்க வேண்டும். பல இடங்களில் தரமாகவும், சில இடங்களில் தரம் குறைவாகவும் உள்ளது. முதலீடு, எண்ணிக்கை மட்டும் போதாது. தரத்தையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொத்தச் செலவில் கல்வித்துறைக்கு 55 ஆயிரத்து 210 கோடி ரூபாய் ஒதுக்கி கல்விக்கு முதலிடம் அளித்துள்ளனர். சுகாதாரத்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி ரூபாய், சமூகநலத்துறைக்கு 8 ஆயிரத்து 597 கோடி ரூபாய், தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினருக்கு 3ஆயிரத்து 924 கோடி ரூபாய் என்று கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற்றத்தை தவிர்க்க முடியாது. தமிழகத்தில் நகர்புற மேம்பாட்டிற்கு 34,396 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சிக்கு ரூ 29,465 கோடி ரூபாய் மொத்தம் ரூ 65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில்களை ஊக்குவிக்க வங்கிகள் மூலம் 2லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டுள்ளனர். வங்கிகள் இழுத்தடிப்பார்கள்.
கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுக்கு 7 கோடி ஒதுக்கீடு, மானாமதுரை அரசு கலைக்கல்லூரி அனுமதி.சென்னைக்கான 4 அறிவிப்புகள் கவர்ந்தன. சென்னை அருகில் 2000 ஏக்கரில் உலகம் தழுவிய நகர், ரூ 350 கோடியில் 2.25 டி.எம்.சி. கொள்ளளவில் 6வது நீர்த்தேக்கம், அண்ணா பல்கலைக்கு ரூ500 கோடி, சென்னை விஞ்ஞான மையத்திற்கு ரூ 100 கோடி ஒதுக்கியுள்ளனர்.
பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 3 சதவீதத்திற்கு கட்டுப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆண்டு கடைசியில் தான் அடக்கினார்களா இல்லையா என்பது தெரியும். மத்திய அரசு பட்ஜெட்டின் 4.1 சதவீத நிதிப்பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தியுள்ளது.
மதிப்பீடு செய்யவில்லை. பட்ஜெட்டில் நல்ல அம்சங்களைச் சுட்டிக் காட்டியுள்ளேன். அதே நேரத்தில் திட்டங்களை செம்மையாக அமல்படுத்த வேண்டும். கோடிக்கணக்கில் முதலீடு என்பது மட்டும் போதாது. தரமும் முக்கியம். அரசு கட்டிடங்கள், பாலம், நெடுஞ்சாலை, மாவட்ட சாலை எல்லாம் தரமாக இருக்க வேண்டும். சில இடங்களில் தரமாக இல்லை.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.










மேலும்
-
சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்: யாரை சொல்கிறார் செங்கோட்டையன்
-
பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் 'ஆப்சென்ட்'
-
பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது; ரங்கராஜ் பாண்டே
-
தமிழை அறிமுகம் செய்த பேராசிரியர்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நெகிழ்ச்சி
-
தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையமா? அன்புமணி கண்டனம்
-
கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியகமா?