பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது; ரங்கராஜ் பாண்டே

31

சென்னை: 'தமிழகத்தில் பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது. அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும்' என்று சாணக்யா யூடியூப் சேனலின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

சாணக்யா யூடியூப் சேனலின் 6ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சாணக்யா சேனலின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, தங்களின் நிறுவனம் கடந்து வந்த பாதை குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி குறித்த கேள்விக்கு ரங்கராஜ் பாண்டே பதிலளித்தார். அவர் கூறியதாவது:- பா.ஜ., மட்டுமல்ல, அ.தி.மு.க., நா.த.க., த.மா.கா., என எந்த கட்சியாக இருந்தாலும், தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தால் மட்டுமே கட்சியை வளர்த்தெடுக்க முடியும். நாட்டின் பிரதமரான மோடி ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைக்கிறார்.


மோடி பிரதமர் வேட்பாளராக இருந்த போது, அப்போதைய பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம், ரிப்போர்ட் கார்டு கொடுத்தார். அதில், நாடு முழுவதும் தான் எத்தனை கூட்டங்களில் கலந்து கொண்டேன் உள்ளிட்ட விபரங்கள் இருந்தது. அவரை விட கூடுதலாக அரை மணி நேரம் தொண்டர்கள் உழைத்தால், 2036க்குள் பா.ஜ., தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது. அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement