சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன்: யாரை சொல்கிறார் செங்கோட்டையன்

12


சென்னை: 'எந்தப் பாதை சரியாக இருக்கிறதோ, அதில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது, என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது,' என்று சாணக்யா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சாணக்யா யூடியூப் சேனலின் 6ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே, பாண்டே என்னிடம் கேட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால், இப்போது இருக்கும் சூழல் இக்கட்டானது. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலை வேறு, தற்போதைய நிலை வேறு.

சுற்றுச்சூழலை பாதிக்கும் விதமாக சாயப்பட்டறை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் என்னிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்டு சபாநாயகரை சந்தித்து கொடுக்கச் சென்றேன். ஆனால், அதுவே தற்போது பெரிய செய்தியாக போய்க் கொண்டிருக்கிருகிறது. செங்கோட்டையன் எப்படி சபாநாயகரை சந்தித்தார். ஒரு எம்.எல்.ஏ., சபாநாயகரை சந்திப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், அதையெல்லாம், தற்போது விமர்சனமாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், இக்கட்டான சூழலில் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

இங்கு இருக்கும் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். அனைவரின் கருத்துக்களையும் கூர்ந்து கவனிக்கிறேன். அரசியல் மட்டுமல்ல பொருளாதாரம், நாடு எப்படி நடைபோட்டு கொண்டிருக்கிறது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இங்கு கேட்டீர்கள். அப்படிபட்ட ஆற்றல் மிக்க சக்திகளாக நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களிடத்தில் நான் சிக்கலான நேரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆண்டாள் நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிக்கிறது. ஆண்டாள் என்று சொன்னாலே, எப்போது ஆட்சியை ஆளப் போகிறார் என்ற கேள்விதான் எழும். 2026 நெருங்கும் நேரம். இந்த நேரத்தில் நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது தான், இங்கு வந்திருக்கும் நான் உங்களுக்கு கோடிட்டு காட்டு விரும்புகிறேன். எந்த பதிலை சொன்னாலும் எப்போதும் போகும், எப்படி போகும் என்பது எல்லாம் உங்களுக்கு தெரியும். எனவே, நான் தடுமாறாமல், ஒவ்வொரு வார்த்தையும் அளந்து பேச வேண்டியிருக்கிறது. சீமானை போல அள்ளி பேசிவிட முடியாது.

ஏனென்றால், அவர் எப்படி வேண்டுமானாலும், உணர்ச்சிகளை பொறுத்துக் கொண்டு பேசலாம். கேட்பதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள். அவரது கருத்துக்களை ஈர்க்கக் கூடியவர்களாக இளைஞர்கள் பட்டாளம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரையில், நிதானத்தோடு, ஒரு இயக்கத்தில் இருக்கிறோம் என்ற முறையில் வார்த்தைகளை உங்களிடத்தில் அள்ளித் தர வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

'ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே' என்று எம்.ஜி.ஆர். கூறினார். இந்தியா ஒருமைப்பாட்டுடன் இருக்கிறது என்று சொன்னால், அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டிலே வாழ வேண்டும் என்று திரைப்படத்தில் அவர் கூறினார். பல்வேறு கருத்துக்களை கேட்ட பிறகு தான், நல்ல தலைவன் மீது விஸ்வாசத்தோடு, தொண்டனாக பணிகளை ஆற்றினோம். இன்றைக்கும் நான் தொண்டனாகத்தான் இருக்கிறேன். நான் தலைவன் அல்ல.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைவியாக ஜெயலலிதா வந்தார். சிறந்த கல்வியாளராக இருந்ததால், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் எந்த முதல்வரும் பேச முடியாத, 6 மொழிகளில் பேசக் கூடிய ஆற்றல்மிகுந்த சக்தியாக இருந்தார். அவருடன் டில்லிக்கு செல்லும் போது, ஒவ்வொரு முதல்வர்களிடம் எந்த மொழியில் பேசக் கூடியவரோ, அந்த மொழியில் ஜெயலலிதா பேசுவார். நான் வியந்து போயிட்டேன். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி சீரோடும், சிறப்பாகவும் எழுச்சியோடு நடத்தினார் ஜெயலலிதா.

நல்லது செய்பவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பாராட்டுவேன் என்று பாண்டே கூறுவார். அதைப் போல தான் மனதில் இருப்பதை சொல்கிறேன். சிறந்த பாரத பிரதமராக மோடி இருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்தத்தில் பிரதமர் மோடிக்கு ரஷ்யா அதிபர் புடின் நன்றி கூறினார். இந்தியாவில் கோவிட் தடுப்பூசியை இலவசமாக கொடுத்தார்.

பாராட்ட வேண்டும் என்று இல்லை. முன்னாள் பிரதமர் இந்திராவையும் சுட்டிக் காட்டினேன். ஏனெனில், நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன். என்னை ஒருபக்கத்தில் தள்ளிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும்செய்யப் போவதில்லை. எந்தப் பாதை சரியாக இருக்கிறதோ, அதில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது, என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது.

பாரதியார் சொன்னதைப் போல, சில வேடிக்கை மனிதர்களைப் போல வீழ்ந்து விட மாட்டேன், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement