கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியகமா?

22

சமஸ்கிருதத்தின் மூலமான தேவநாகரி எழுத்துருவில் இருப்பதாகக் கூறி, ரூபாய் குறியீடான ₹-யை ‛ரூ'' என தமிழில் மாற்றியது தமிழக அரசு. இப்படி செய்துவிட்டு மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அருங்காட்சியகம் அமைப்பதாக தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது பல வித விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பட்ஜெட்டில், உலகின் பழமையான பாரம்பரிய மொழிகளில் ஒன்றான தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி குறித்து இளைய தலைமுறையினருக்குக் கற்பிக்க மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் 'அகரம் - மொழிகள் அருங்காட்சியகம்' நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் பிற இந்திய மொழிகளுடனான தமிழின் மொழியியல் உறவுகளை எடுத்துக்காட்டும். இது தென்னிந்திய பழங்குடி சமூகங்களால் பேசப்படும் மொழிகளை ஆவணப்படுத்தும்.

இதில் வினோதம் என்னவென்றால், அருங்காட்சியக அறிவிப்புக்கு முன்னதாகவே, மொழிக் கொள்கை மற்றும் கல்வி நிதி தொடர்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் உருவாகி விட்டது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,150 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். இருமொழிக் கொள்கையில் மாநிலம் உறுதியாக இருப்பதாக அவரும் முதல்வரும் திரும்ப திரும்ப கூறி வருகின்றனர். அதாவது, தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் எங்களுக்கு வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டனர்.

அதிகாரப்பூர்வ ₹ சின்னத்தை 'ரூ' (தமிழில் ரூபாய்) என்ற தமிழ் எழுத்தால் மாற்றிய ஒரு நாளுக்குப் பிறகு அருங்காட்சியக அறிவிப்பு வருகிறது, அதாகப்பட்டது, முதல் நாள் ஒரு அறிவிப்பு, மறுநாள் அதற்கு நேர் விரோதமாக இன்னொரு அறிவிப்பு.

சகிப்புத் தன்மை எங்கே:

ஒரு மொழி வளர வேண்டும் என்றால், அது மற்ற மொழி, கலாசாரம், பண்பாட்டில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்து தான் ஆங்கிலம் உலக மொழி ஆனது. ஆனால், தமிழை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் திராவிட கட்சிகள், தமிழை பின்னோக்கி இழுக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன.

ஒரு தமிழர் வடிவமைத்து இந்தியாவே ஏற்றுக்கொண்ட எழுத்துருவை திடீரென ஏற்க மறுத்துவிட்டு, மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை மட்டும் எப்படி இவர்கள் ஆராய்வார்கள்?.

மற்ற மொழிகளுடன் தமிழுக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும் என்றால் மற்ற மொழிகளையும் இவர்கள் கற்றுத் தானே ஆக வேண்டும். வேறு மொழியை கற்காமல் எப்படி அதனுடன் தமிழுக்கு உள்ள தொடர்பை ஆய்வு செய்ய முடியும்?.

இது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல் இல்லையா. பேசுவது ஒன்று, செய்வது வேறா. ஏனிந்த இரட்டை வேடம்.

தமிழை உண்மையில் வளர்க்க வேண்டும் என்றால், அதை செறிவூட்ட வேண்டும்; தமிழில் இல்லாத உச்சரிப்புகள், வார்த்தைகளை கொண்டு வந்து நவீனப்படுத்த வேண்டும். மற்ற மொழிக்காரர்களும் கற்கும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அரசியல் செய்து கொண்டிருந்தால், தமிழ் எப்படி வளரும்?.

Advertisement