எட்டாவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

புதுடில்லி: எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், அகவிலைப்படியை(DA) அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது மற்றும் சம்பள உயர்வு ஆகியவை தேவை என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.



மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் 8வது சம்பள கமிஷன் அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த குழுவுக்கு இன்னும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.


அதேநேரத்தில், இந்த கமிஷன் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


அவர்கள் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி( DA)யை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கையை 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட 7 வது சம்பள கமிஷனிடமும் கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால், அரசு ஏற்கவில்லை.

1996 -2006ல் அமைக்கப்பட்ட 5வது கமிஷன், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டியதும் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தது. இதன்படி 2004ம் ஆண்டு அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு செலவு அதிகம் ஏற்பட்டது. ஆனால், 2006ல் 6வது சம்பள கமிஷன், இந்த முடிவை மாற்றியது.


சம்பள உயர்வு

தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.18 ஆயிரமாக உள்ளது. தற்போது இரு மடங்கு அதிகரிப்பு என்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், அவர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.36 ஆயிரமாக மாறும்.

ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது குறைந்தபட்ச மாத பென்சன் ஆக 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது அதிகரிக்கப்பட்டால் அவர்களின் குறைந்தபட்ச பென்சன் ரூ.18 ஆயிரமாக அதிகரிக்கும்.

8வது சம்பள கமிஷன் தலைவர் நியமிக்கப்பட உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement