கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா: ரூ.12 லட்சம் பங்கு பத்திரத்துடன் தவித்தவருக்கு கை மேல் கிடைத்தது உதவி

2

புதுடில்லி: தன் தந்தை 37 ஆண்டுக்கு முன் வாங்கிய ரிலையன்ஸ் நிறுவன பங்கு பத்திரத்தை கண்டுபிடித்தவர், அதை பணமாக்கும் வழிமுறை தெரியாமல் பரிதவித்தார். அவருக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

சண்டிகரை சேர்ந்தவர் ரத்தன் தில்லான். இவர் தன் வீட்டில் இருந்த பழைய பொருட்கள், இரும்பு பெட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

ஒரு பெட்டியில், அவரது தந்தை வைத்திருந்த பழைய கடிதங்கள், ரசீது போன்றவை இருந்தன. அவற்றுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு பத்திர சான்று ஒன்றும் இருந்தது.

கடந்த 1988ல் வாங்கப்பட்ட இந்த பங்கு பத்திரத்தில், தலா பத்து ரூபாய் மதிப்பு கொண்ட 30 பங்குகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி ஒரு பங்கு பத்திரம் தன் வீட்டில் இருப்பதே ரத்தன் தில்லானுக்கு தெரியாமல் இருந்தது.
அதன் மதிப்பு என்ன, எப்படி அதை காசாக்குவது என்று அறிந்துகொள்ள சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.


அப்போதுதான், அந்தப் பங்கு பத்திரத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாயாக உயர்ந்திருப்பது தெரிய வந்தது. ஜாக்பாட் அடித்துவிட்டதாக பெரு மகிழ்ச்சி அடைந்தார் ரத்தன் தில்லான். ஆனால் அவரது மகிழ்ச்சி நீடிக்க வில்லை. அந்த பங்கு பத்திரத்தை காசாக்க வேண்டும் என்றால், சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெற வேண்டும்.


அதற்கு 6 முதல் 8 மாதங்கள் ஆகும். முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் தடையின்மை சான்று பெறுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று அவருக்கு நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான நடைமுறைக்காக நிறைய அலைய வேண்டியிருக்கும் என்றும் அவரை சிலர் அச்சுறுத்தி உள்ளனர்.


இதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், தான் அந்தப் பத்திரத்தை காசாக்கும் முயற்சியை கைவிடப் போவதாக தெரிவித்தார். இந்த சிரமங்களை மனதில் எண்ணிய அவர், கைகட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று நினைத்துக் கொண்டு, திருபாய் அம்பானி கையெழுத்திட்ட பங்கு பத்திரங்கள் வீணாகப் போவதாக பதிவிட்டார். தான் அந்த பத்திரங்களை காசாக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.


இந்நிலையில், சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வழி காட்டினர். மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் சார்பில் அவருக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் தான் அந்தப் பத்திரத்தை காசாக்க போவதாகவும், கிடைக்கும் தொகையில் பாதியை நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாகவும் ரத்தன் தில்லான் தெரிவித்துள்ளார்.


உரிய வழிகாட்டுதல் வழங்கிய முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்துக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement