தேர்வு நேரத்தில் முன்னறிவிப்பற்ற மின்தடை தவிப்பிற்குள்ளாகும் மாணவர்கள்
செம்பட்டி; செம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நேற்று முன்னறிவிப்பற்ற மின்தடை ஏற்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
கன்னிவாடி, செம்பட்டி, சின்னாளபட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சில இடங்களில் 2 நாட்களாக மாலை நேரங்களில் கருமேகம் பரவலாக சூழ்ந்த போதும் மழை இல்லை. பகலில் அதிக வெப்பமான சூழல் நிலவியது. ஆத்துார், சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி, செம்பட்டி, ஆதிலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சில நிமிட மின்தடை ஏற்பட்டு வந்தது. புகார் எழுப்புவோரிடம் உள்ளூர் பழுது நீக்க பிரச்னைக்காக மின்தடை இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வரும் சூழலில் மாதாந்திர பராமரிப்பு நிறுத்தி வைக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்று காலை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், காலை 9:30 முதல் 10:30 மணி வரை, செம்பட்டி பகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
நேற்று மாலை 6:00ல் துவங்கிய தடை 2 மணி வரை நேரத்திற்கு பின் சீரானது. கரிசல்பட்டி, பழைய கன்னிவாடி பகுதியில் அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் மின் தடை ஏற்பட்டது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
கன்னிவாடியில் ஏற்பட்ட மின்பாதை பிரச்னை, செம்பட்டி மின் டிரான்ஸ்பார்மர், வினியோக சாதன பழுது என ஒவ்வொரு அதிகாரியும் வெவ்வேறு காரணங்களை கூறினர்.
அமைச்சர் தொகுதியில் பட்ஜெட் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியாத மக்களும் , படிப்பில் சிரமம் சந்தித்த மாணவர்களும் பாதிப்பால் அதிருப்தி அடைந்தனர்.