சவால்களை சந்தித்து மாணவர்கள் சாதிக்க வேண்டும் பட்டமளிப்பில் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லிபாபு அறிவுரை

'கல்விக்கு கரையில்லை. படித்து முடித்து பட்டம் பெற்றுவிட்டால் போதுமானதல்ல. இன்னும் சவால்களை சந்தித்து, சாதிக்க முடியும் என்ற எண்ணம் எழ வேண்டும்,'' என, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவுரை வழங்கினார்.

ஆந்திர மாநிலம், குப்பம் நகரில் உள்ள குப்பம் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லுாரி தலைவர் நாகராஜ் வரவேற்று பேசுகையில், ''குப்பம் பொறியியல் கல்லுாரி, 2001ல் 146 மாணவர்களுடன் துவக்கப்பட்டது. தற்போது 2,600 மாணவர்கள் படிக்கின்றனர்.

ஆரம்ப கல்வி துவங்கி பள்ளி, பட்டப்படிப்பு கல்லுாரி, பி.டெக், - எம்.டெக்., - எம்.பி.ஏ., பொறியியல் கல்லுாரி வரை நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் 275 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதனால், கல்லுாரிக்கு பெருமை,'' என்றார்.

வாய்ப்புகள்



சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியதாவது:

நம் நாடு நிலம் சூழ்ந்த இடம் மட்டுமல்ல; மக்களும் நிறைந்துள்ளனர். இது மக்களின் நாடு என்பதை குரு ஜடா அப்பாஜி ராவ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பாடத்தை படித்து, வெற்றி பெற்று பட்டம் பெற்றுவிட்டால் போதும் என்பதல்ல.

அறிவியல் தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும். வீட்டில் இருந்தவாறே படிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.

பொறியாளர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டு, சமுதாய மேம்பாட்டுக்கு பயன் தரும் வகையில் கண்டுப்பிடிப்புகளில் ஈடுபட வேண்டும்.

உலகில் உயிரினங்களுக்கு மிக அவசியமானது ஆக்சிஜன். விண்வெளியில் பயணம் செய்கிறபோது காற்றின் பளு தன்மை குறைகிறது. இதற்கு என்ன தீர்வு; சுவாசத்திற்கு ஆக்சிஜன் கட்டாயம் தேவை.

ஆக்சிஜன்



செயற்கை ஆக்சிஜனை சிலிண்டரில் நிரப்பி அனுப்ப வேண்டும். ஏர் கிராப்ட் சேவைகளுக்கு ஆக்சிஜன் மிக முக்கியம். வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு 21 சதவீதம் மட்டுமே. எனவே ஆக்சிஜன் தயாரிப்புக்கு, பொறியாளர் கண்டுபிடிப்புக்கான ஆய்வு கூடம் அவசியமாகிறது.

இதில் பொறியாளர் கண்டுப் பிடிப்பில் சவால்கள் காத்திருக்கின்றன.

உலகை மிரட்டிய கொரோனா ஊரடங்கால், வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வேளையில், நம் நாட்டில் 140 கோடி இந்திய மக்களின் உயிருக்கு தேவையான ஆக்சிஜன் அவசியத்துக்கு, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் ஆய்வில் ஈடுபட்டனர். 500 டேங்கர் ஆக்சிஜன் தயாரித்தனர். ஒரு டேங்கரில் 1,000 லிட்டர் ஆக்சிஜன் வழங்க முடிந்தது.

சுற்றுச்சூழலை கெடுக்கும் கார்பன்டை ஆக்சைடு, ஒரு நிமிடத்தில் 500 டன் சேருகிறது. இதை தவிர்க்க, பொறியாளர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண வேண்டும்.

பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, டெலிகாம் புரட்சி, அண்மையில் மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயில், விண்வெளியில் புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் நம் நாடு, தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கிறது.

3 வித திட்டமிடல்



வேலை வாய்ப்பு மார்க்கெட்டில் திறமை, தகுதியில் சிறப்பான இடத்தில் உள்ளோம். பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வாழ்க்கையில் 3 வித திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். செலவு, எடை, நேரம் ஆகியவற்றை பட்ஜெட்டாக திட்டமிடல் மிக முக்கியம்.

குறிப்பாக உடற்பயிற்சி, யோகா, சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு, தொழில் முனைவில் நேரம் அவசியமாகும். ஸ்டார்ட்- அப் எனும் தொழில் முனைவோர் அளவிடக்கூடிய வணிக மாதிரியை தேட, மேம்படுத்தும் நிறுவனங்களில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இளைஞர்கள் பங்கு அதிகம் தேவைப்படுகிறது. வேலை வாய்ப்பு பெறுவதில் முன்னிலை வகிக்க வேண்டும்.

காற்று, மண், இயற்கை வளங்களை சேதம் அடையாமல் பாதுகாக்க அறிவியல் பூர்வ கண்டுபிடிப்புகளில் நாட்டம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லுாரி துணைத் தலைவர் சுனில் ராஜ், செயலர் சாகர் ராஜ், முதல்வர் சுதாகர் ராவ், கல்லுாரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement