அரசு காரில் தங்கம் கடத்திய ரன்யா ராவ்

1

பெங்களூரு,: தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கு கொடுக்கப்பட்ட, அரசு காரில் ரன்யா ராவ் தங்கம் கடத்தியது தெரிய வந்துள்ளது.

துபாயில் இருந்து, 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகள் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை வலையில், வசமாக சிக்கி உள்ளார்.

டி.ஆர்.ஐ., விசாரணை முடிந்த நிலையில், ரன்யா ராவிடம் விசாரிக்க சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை தயாராகி உள்ளன.

இந்த வழக்கில் ரன்யா தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில் அரசு உயர்மட்ட குழு அமைத்தது.

இந்த குழுவினர் நேற்று முன்தினம் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தங்கம் கடத்திய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தன் வீட்டிற்கு, அரசு காரில் ரன்யா தங்கம் கடத்தியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

நோட்டீஸ்



அதாவது மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, அரசு சார்பில் பயன்படுத்துவதற்கு ஒரு காரும்; அதற்கு மாற்றாக இரண்டு கார்களும் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. மாற்று கார்களை, அதிகாரிகள் குடும்பத்தினர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ராமசந்திர ராவுக்கு அளிக்கப்பட்ட மாற்று காரை, ரன்யா பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. வெளிநாட்டிற்கு செல்லும்போது விமான நிலையத்திற்கும், வெளிநாட்டில் இருந்து வந்து, விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும்போதும், அரசு காரை ரன்யா ராவ் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அந்த காரில் தான் தங்கம் கடத்தி உள்ளார்.

உயர் அதிகாரியின் மகள் உள்ளே இருந்ததால், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. சல்யுட் அடித்து அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு கொண்டு வந்த தங்கத்தை, வேறு இடத்திற்கு அரசு காரில் அனுப்பி வைத்தாரா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

ரன்யாவுக்கு விமான நிலையத்தில் 'புரோட்டாகால்' மரியாதை கொடுத்த போலீஸ்காரர்கள் பசவராஜ், மஹாந்தேஷ், வெங்கடராஜ் ஆகியோருக்கு, விசாரணை ஆஜராகும்படி உயர்மட்ட குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ரன்யாவின் வங்கிக்கணக்கு விபரங்களை டி.ஆர்.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.



15 முறை கன்னத்தில் அறை

ரன்யா ராவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில், பரப்பன அக்ரஹார சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பின், கஸ்டடியில் இருந்த நடிகை ரன்யா ராவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், கண்களுக்கு கீழே கருமையான திட்டுகளுடன், மன அழுத்தத்தில் அவர் இருப்பது போல தெரிந்தது.இந்நிலையில், டி.ஆர்.ஐ., கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு, சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவ் கைப்பட எழுதிய கடிதம்:நான் கைது செய்யப்பட்டது முதல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, டி.ஆர்.ஐ., அதிகாரிகளால் உடல் ரீதியாக தாக்கப்பட்டேன். என்னை, 10 - -15 முறை கன்னத்தில் அவர்கள் அறைந்தனர். அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். பல முறை தாக்கப்பட்டபோதும், அவர்கள் தயாரித்த அறிக்கைகளில் கையெழுத்திட மறுத்துவிட்டேன்.மிகப்பெரிய மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்பட்டதால், டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தயாரித்த, தட்டச்சு செய்யப்பட்ட, 50 பக்கங்களிலும், 40 வெள்ளை காகிதங்களிலும் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. மார்ச் 3 மாலை 6:45 மணி - மார்ச் 4 இரவு 7:50 மணி வரை கஸ்டடியில் இருந்தபோது, எனக்கு வேண்டுமென்றே உணவு தரப்படவில்லை. மேலும், துாங்கவும் அனுமதிக்கவில்லை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, சமூக வலைதளமான யு டியூப் பார்த்து, தங்கம் கடத்துவது எப்படி என அறிந்து கொண்டதாக ரன்யா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமையை அவர் பெற்றிருந்ததால் தான், அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.டி.ஆர்.ஐ., காவலுக்குப் பின் ஆஜர்படுத்தப்பட்டபோது, “விசாரணை அதிகாரிகள் உங்களுக்கு தொல்லை கொடுக்கின்றனரா?” என்று நீதிபதி கேட்ட போது, “இல்லை” என்று கூறி இருந்தார். இப்போது டி.ஆர்.ஐ., அதிகாரிகளுக்கு எதிராக புகார் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜெனிவா செல்வதாக பொய்

துபாயில் இருந்து இரண்டு முறை தங்கக் கட்டிகள் கடத்தியபோது, துபாய் சுங்கத்துறை அதிகாரிகளிடம், “இங்கிருந்து நான் ஜெனிவாவுக்கு தங்கக் கட்டிகள் வாங்கிச் செல்கிறேன்,” என, ரன்யா ராவ் கூறி உள்ளார்.அதற்கான ஆவணங்களையும் அவர் காட்டி உள்ளார். ஜெனிவாவில் தங்கம் தொழில் அதிகம் நடப்பதால், துபாய் சுங்கத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரன்யா, பெங்களூருக்கு தங்கக் கட்டிகள் கடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.



கார் டிரைவர் கைது

சிக்கமகளூரை சேர்ந்தவர் தீபக், 45. இவர் ரன்யாவிடம் கார் டிரைவராக இருந்தார். நேற்று தீபக்கை பெங்களூரு சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் போலீசார் மறுத்தனர். மோசடி வழக்கில் கைது செய்து இருப்பதாக விளக்கம் அளித்துள்ளனர்.



கட்டாய விடுப்பு

ரன்யா ராவின் தந்தையான கூடுதல் டி.ஜி.பி., ராமசந்திர ராவ், மகள் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியதும் விடுமுறை எடுத்துச் சென்றார். தற்போது அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்து அரசு உத்தரவிட்டுள்ளது.ராமசந்திர ராவ் வகித்த பொறுப்பை, ஆட் சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சரத் சந்திரா கூடுதலாக கவனிப்பார் என்று அரசு கூறி உள்ளது.

Advertisement