நிறைவடையும் சைக்கிள் பேரணி அமித் ஷா 31ல் குமரி வருகிறார்

1

நாகர்கோவில்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 31-ல் கன்னியாகுமரி வருகிறார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையான சி.ஐ.எஸ்.எப்., நிறுவன தினத்தை முன்னிட்டு, கடற்கரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆர்.டி.சி., மையத்தில் இருந்து மார்ச் 7ல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார்.

'பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தியா' என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இந்த பேரணி, தேச பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நடத்தப்படுகிறது.

வடக்கு, தெற்கு என, இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,653 கி.மீ., பயணம் செய்து, மார்ச் 31ல் கன்னியாகுமரி விவேகானந்தா நினைவிடத்திற்கு பேரணி வந்தடைகிறது.

பேரணியை, அமித் ஷா நிறைவு செய்து வைத்து பேசுகிறார். இதற்காக, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் பற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை தென்மண்டல ஐ.ஜி., சரவணன் நேற்று ஆய்வு செய்தார்.

Advertisement