பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சித்தாமூர்:சூணாம்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
சம்பா பருவத்தில் தற்போது 600க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு போன்ற நீர் ஆதாரங்கள் மூலமாக நெற்பயிர்களுக்கு நீர்பாசனம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு பருவ மழையின் போது ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக, செய்யூர் வட்டத்தில் சூணாம்பேடு ஊராட்சி பெரிதும் பாதிக்கப்பட்டு, நெற்பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
குறிப்பாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, புதுப்பட்டு கிராமம் முழுதும் தண்ணீர் சூழ்ந்தது.மேலும் வயல்வெளியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன.
நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது, வெள்ள பாதிப்பால் குறைந்த அளவே மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை புதுப்பட்டு பகுதியில் இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.