உயர்மட்ட பாலம் தயார் 30 கிராமவாசிகள் மகிழ்ச்சி

சோழவரம்:சோழவரம் அடுத்த மடியூர், வழுதிகைமேடு, பசுவன்பாளையம், கண்ணியம்பாளையம், அட்டப்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, பொன்னேரி வந்து செல்கின்றனர்.
இந்த கிராமங்களுக்கும், பொன்னேரி பகுதிக்கும் இடையே கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது. மழைக்காலங்களில் ஆற்றை கடப்பதில் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இக்கிராம வாசிகளின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 18.50 கோடி ரூபாயில், பொன்னேரி அடுத்த நாலுார் கம்மவார்பாளையம் - மடியூர் கிராமங்களுக்கு இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த 2022ல் துவக்கப்பட்டன.
ஆற்றில் ஒன்பது இடங்களில் கான்கிரீட் துாண்கள் அமைத்து, அதன் மீது, 210 மீ., நீளம், 12 மீ., அகலத்தில் ஓடுபாதை, பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனிப்பாதை உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
பாலத்திற்கான கட்டுமான பணிகள் முடிந்து, இருபுறமும், 300 மீ., நீளத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகள், கடந்த ஜனவரியில் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முடிவுற்று தற்போது பாலம் தயார்நிலையில் உள்ளது.
இந்த பாலமானது, பொன்னேரி - -திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சீமாவரம்- - காரனோடை நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. 30 கிராமங்களின் நீண்டநாள் பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளதால், கிராமவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.