சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்களில் பெரும்பாலான மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். விவசாயம் தவிர கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கால்நடைகளை வீடுகளில் பராமரிக்காமல், சாலையில் திரிய விடுகின்றனர்.
இந்நிலையில், இவை உணவுக்காக சாலையில் இருக்கும் அழுகிய காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றை உண்கின்றன. திருவள்ளூர் மாவட்டம், தற்போது வளர்ந்து வரும் நிலையில், புதிதாக பேருந்து நிலையங்கள், தொழிற்பூங்காக்கள், அறிவுசார் நகரம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.
சென்னை - ஜனப்பன்சத்திரம் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலை, திருவள்ளூர் - திருத்தணி மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து நிறைந்த இந்த நெடுஞ்சாலையில் உள்ள பெரியபாளையம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை, ஒதப்பை, பூண்டி, திருவள்ளூர், கடம்பத்துார், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில், கால்நடைகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இரவு நேரங்களில் சாலைகளில் ஓய்வெடுக்கின்றன.
இதனால் ஏற்படும் விபத்துகளில், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மாவட்டத்தில் பதவியேற்கும் ஒவ்வொரு கலெக்டர்களும், சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகள் பிடிக்கப்பட்டு கோ சாலையில் ஒப்படைக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அதன்பின், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.