கோவில் விழாவில் மார்க்சிஸ்ட் கொடி: விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவு

2

திருவனந்தபுரம்: கேரளாவில் கோவில் திருவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடி பறக்கவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் நடந்த திருவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:

கேரளாவில் கோவிலுக்குள் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்களை காட்சிப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எப்.ஐ.,யின் கொடி பறக்கவிடப்பட்டதாகவும், அந்த கட்சியின் புகழ்பாடும் பாடல்கள் இசைக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக விஜிலன்ஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னதாக கடந்த வாரம் பெரும்பாவூர் கோவிலில் நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ்., நடத்திய உடற்பயிற்சியின் போது இதே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் ஆகியவை கோவில் வளாகத்தில் இடம்பெறக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement