திருத்தணி ரயில் நிலைய பணிகள் தாமதம் பயணியர் கடும் அவதி

திருத்தணி,:திருத்தணி ரயில் நிலையத்தின் தரம் உயர்த்த 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆக., 6ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக, திருத்தணி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.

ரயில் நிலையத்தில் ஸ்கேட்டலர், லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம், ரயில் நிலையத்திற்கு பயணியர் வருவதற்கு ஒருவழியும், வெளியே செல்வதற்கு ஒரு வழியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், ரயில் நிலைய நுழைவாயிலில் முருகன் கோவில் கோபுரம் ஏற்படுத்தவும், அனைத்து பேருந்துகளும் ரயில் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

ரயில் நிலைய மூன்று நடைமேடைகளுக்கும் பயணியர் எளிதாக செல்வதற்கு மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்படும். இந்த வளர்ச்சி பணிகள், 120 நாட்களில் முடித்து பயன்பாட்டிற்கு விட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது, ரயில் நிலையத்தில் நுழைவாயில் மற்றும் நடைமேடைகளில் இருந்து பயணியர் வெளியேறுவதற்கு இரு வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, நடைமேடைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரயில் நிலைய வளர்ச்சி பணிகள் காலதாமதமாக நடந்து வருவதால், பயணியர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, ரயில்வே அதிகாரிகள் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement