வரும் சட்டசபை தேர்தலில் 74 பெண்களுக்கு சீட்? தயாராகும்படி துணை முதல்வர் சிவகுமார் அழைப்பு

பெங்களூரு: ''பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், அடுத்த சட்டசபை தேர்தலில், 74 இடங்களில் பெண்கள் போட்டியிடலாம். எனவே, தேர்தலுக்கு தயாராகுங்கள்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தின் பாரத் ஜோடோ பவனில் நேற்று மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவை துவக்கி வைத்து, துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், அடுத்த சட்ட சபை தேர்தலில், 224 தொகுதிகளில், 74 பெண்கள் போட்டியிடலாம். எனவே, தேர்தலுக்கு தயாராகுங்கள்.

கர்நாடகாவில் 'கிரஹலட்சுமி' திட்ட பயனாளிகள் எண்ணிக்கை, 1.23 கோடியை எட்டி உள்ளது. 'கிரஹஜோதி' திட்டம், 1.50 கோடி குடும்பங்களை சென்றடைந்துள்ளது. பெண்களுக்கு மாநிலம் முழுதும் அரசு பஸ்களில் இலவசமாக செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளோம்.

வீடும், வீட்டு மனையும், வீட்டு பெண்கள் பெயரில் இருக்க வேண்டும் என்று விதிகளை அமல்படுத்தி உள்ளோம். என் தொகுதியில், 7,000 பெண்களுக்கு ஆஷ்ரியா வீட்டு மனை வழங்கி உள்ளேன்.

கடந்த காலங்களில் 18 இடைத்தேர்தல்களில், 15ல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்றபோது, காங்கிரசின் எதிர்காலம் பெண்கள், இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை முடிவு செய்தேன். இதனால் பெண்கள், இளைஞர்களை மனதில் வைத்து தேர்தல் அறிக்கை வெளியிட்டோம்.

வாக்குறுதித் திட்டங்களை அறிவித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.,வினர் கிண்டல் செய்தனர். தற்போது பா.ஜ.,வும், அதையே தான் செய்துள்ளது.

வாக்குறுதித் திட்டங்கள், பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கவே, குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

எம்.எல்.ஏ.,க்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராணி சதீஷ் காலத்தில் இருந்து இன்று வரை மகளிர் காங்கிரஸ் செயல்பாடுகள் திருப்தி அளித்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement