மகன், மைத்துனர் மனைவி கொலை பெண், கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'

பெலகாவி; கள்ளத்தொடர்பை மூடிமறைக்க சொந்த மகனையும், மைத்துனரின் மனைவியையும் கொன்ற பெண்ணுக்கும், அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெலகாவி, ஹுக்கேரியின் பெல்லத பாகேவாடி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சுரேஷ் கரிகாரா, 37. இவரது மனைவி சுதா, 32. தம்பதி மகன் பிரவீன், 10. சுதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ராமப்பா என்ற ரமேஷ் கெஞ்சப்பா பஸ்தவாடே, 25, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர்.

இவர்கள் நெருக்கமாக இருப்பதை, சுதாவின் மகன் பிரவீன் பார்த்துவிட்டார். தாயை கண்டித்த அவர், இவ்விஷயத்தை தந்தையிடம் கூறுவதாக எச்சரித்தார். இதனால் பயந்த சுதா, 2019 அக்டோபர் 22ல், மகனை கிணற்றில் தள்ளிக் கொலை செய்தார்.

பின், மகனை காணவில்லை என, நாடகமாடினார். இதுகுறித்து சுரேஷ் கரிகாரா, கித்துார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பின் போலீசார் தேடியபோது, கிணற்றில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, கருதப்பட்டது.

மகனை கொன்ற பின்னும், சுதா, ரமேஷின் கள்ளத்தொடர்பு நீடித்தது. இவ்விஷயம் சுதாவின் மைத்துனர் சென்னப்பா மனைவி பாக்யஸ்ரீ, 32, என்பவருக்கும் தெரிந்தது. அவர், சுதாவை திட்டிக் கண்டித்தார். இதனால் அவரையும் கொல்ல முடிவு செய்தனர்.

கடந்த 2019 டிசம்பர் 8ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாதபோது, தனியாக இருந்த பாக்யஸ்ரீயை சுதாவும், ரமேஷும் சேர்ந்து தீவைத்து எரித்துக் கொலை செய்தனர். விபத்து போன்று காண்பித்தனர். ஆனால் மனைவி இறப்பில் சந்தேகம் உள்ளதாக, சென்னப்பா கித்துார் போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில் இறங்கியபோது, சுதா, ரமேஷின் கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிய வந்தது. அவர்களின் நடவடிக்கையும் சந்தேகத்துக்கு இடமளித்தது. போலீசார் விசாரித்தபோது, பாக்யஸ்ரீ மட்டுமின்றி, பிரவீனும் கொலை செய்யப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தது.

இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையை முடித்து, ஹுக்கேரியின் ஏழாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் ஆயுள் தண்டனை, 2.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தாரகேஸ்வர கவுடா பாட்டீல், நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement