நவக்கிரக கோவில்களை புனரமைக்க ரூ.30 கோடி நிதி..

சென்னை: 'பிரசாத்' திட்டத்தின் கீழ், தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒன்பது நவக்கிரக கோவில்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புனரமைக்க, மத்திய அரசு, 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாமல்லபுரம் பாரம்பரிய பூங்கா, நீலகிரி மலர் தோட்டம் மற்றும் ராமேஸ்வரத்தை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற, 4,574 கோடி ரூபாய் நிதி கேட்டு, மத்திய சுற்றுலா துறை அமைச்சரிடம், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் கடந்தாண்டு நவம்பரில் கோரிக்கை மனு அளித்தார்.
அதன்படி, மாமல்லபுரம் மற்றும் தேவாலா திட்டத்திற்கான, 170 கோடி ரூபாய் நிதியை, மத்திய சுற்றுலா துறை கடந்தாண்டு நவம்பர் இறுதியில் ஒதுக்கீடு செய்தது.
அதன் தொடர்ச்சியாக, பிரசாத் திட்டத்தின் கீழ், தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒன்பது நவக்கிரக கோவில்களில், பக்தர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கோவில்களை புனரமைக்கும் வகையில், 30 கோடி ரூபாய் நிதியை, மத்திய சுற்றுலா துறை சமீபத்தில் ஒதுக்கீடு செய்துள்ளது.
சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக சுற்றுலா துறை சார்பில், பிரசாத் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள எட்டு நவக்கிரக கோவில்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 44.95 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.
ஆனால், மத்திய சுற்றுலா துறை, தமிழகத்தின் எட்டு கோவில்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு கோவிலுடன் சேர்த்து, ஒன்பது நவக்கிரக கோவில்களில் சுற்றுலா பயணியருக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புனரமைக்க, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள சூரியனார் கோவில், திங்களூர் கைலாசநாதர் கோவில், கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் உள்ளிட்ட எட்டு நவக்கிரக கோவில்களும்; புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலும் சேர்த்து, விரைவில் புனரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
